சொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடருக்குப் புதிது என்றாலும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் இந்தப் போட்டியில் நடைபெற்றன.

நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி 20 ஓவர் முடிவிற்கு 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்திருந்தனர். இதில் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆட்டத் துவக்கத்திலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து பவர் பிளேவில் களம் இறங்கிய அவர் 3 ஓவர் வீசி 10 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை அசரவைத்துவிட்டார்.

இதையடுத்து 159 என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியினர் 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 161 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றனர். இந்தப் போட்டியின்போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு கேப்டன்சி செய்திருந்தார். அதாவது உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு வேறெந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்துவந்த அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் ஈடுபட்டார்.

2 வருடங்களாகப் பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்துவந்த ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியின்போது 1 ஓவர் மட்டுமே வீசினார். ஆனால் நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசி அசத்தலான கம்பேக் கொடுத்திருக்கிறார் . அதோடு பேட்டிங்கில் 30 ரன்களை விளாசிய சமயத்தில் அவருடைய அண்ணன் க்ருணால் பாண்டியாவின் தந்திரத்தால் விக்கெட்டை இழந்துவிட்டார். இதனால் க்ருணால் முகத்தில் கைவைத்து விழித்த காட்சிகளும் கிரவுண்டிற்குள் அரங்கேறியது.

இறுதியில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது அபினவ் மனேகார் அடுத்தடுத்து பவுண்ட்ரிகளை பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனால் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது.

அணியின் வெற்றிக்குறித்துப் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அண்ணன் கைகளால் விக்கெட் இழந்தது பற்றி, இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் வெற்றிப்பெற்று சமன் செய்துவிட்டோம் என்று சோகத்துடன் பேசியிருந்தார். மேலும் 4 ஆவதாக களம் இறங்கியது குறித்துப் பேசிய அவர் அந்தத் தருணத்தில் அதிக ஃபிரஷர் இருக்கும். மற்ற வீரர்கள் இவற்றைத் தவிர்த்துவிட்டு எளிதாக விளையாட வேண்டும் என்று கருதினேன் என்றும் கூறியிருந்தார்.