ரூ.5 கோடிக்கு வாட்ச்… சுங்கத்துறையிடம் சிக்கிய ஹர்திக் பாண்டியா… நடந்தது என்ன?

டி20 உலகக்கோப்பை போட்டியை முடித்துக்கொண்டு துபாயில் இருந்து இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டதாகவும் இதில் ரூ.5 கோடி மதிப்பிலான 2 வாட்ச்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்டியா நான் கடந்த 14 ஆம் தேதி தாயகம் திரும்பினேன். மேலும் மும்பை விமான நிலையத்திற்கு வந்தவுடனேயே நான் நேரடியாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்று கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலை தெரிவித்தேன்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் நான் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோலவும் அதற்கு வரி செலுத்த மறுப்பது போலவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டனர். உடனே ஆவணங்களை சமர்ப்பித்தேன். தற்போது அதிகாரிகள் அதற்கான சுங்கவரி மதீப்பீட்டை செய்து வருகின்றனர்.

அவர்கள் மதிப்பீட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன். இதனால் நான் சட்டத்தை மீறிவிட்டதாகப் பரவும் தகவல்கள் பொய். அதேபோல நான் கொண்டு கொண்டுவந்த கைகடிகாரத்தின் விலை ரூ.1.5 கோடி மதிப்பிலானது. நான் சட்டத்தை மதிக்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான கைகடிகாரத்தை கொண்டுவந்ததாகக் கூறப்படும் தகவலை ஹர்திக் பாண்டியா மறுத்துள்ளார். மேலும் சட்டத்தை மதிக்கிறேன் என்றும் தான் வாங்கிய கைகடிகாரத்திற்கான வரியை செலுத்தவுள்ளதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார்.