எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஹார்ட் டிஸ்குகள், ஆவணங்கள் பறிமுதல்.....!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி மீது எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடத்திலும் இன்று காலை 6 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரின் இல்லத்தின் முன்பு குவிந்துள்ளனர்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் சகோதரரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியையும் மற்றும் வேலுமணியின் அறையையும், 2 குழுக்களாக பிரித்து டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அவரின் வழக்கறிஞர்கள் விடுதிக்குள் நுழைய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் 2014 முதல் 2018-க்கு இடையிலான காலகட்டத்தில், சென்னை மாநகராட்சியின் விதிகளுக்கு உட்படாமல், அவற்றை மீறி எஸ்பி. வேலுமணி டெண்டர் ஒதுக்கியதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில் எம்.எல்.ஏ விடுதியில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவரின் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, வங்கி பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள், ஹார்ட்டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணியின் ஆடிட்டர் இல்லம், அபிராமிபுரத்தில் உள்ள நிலையில், அங்கும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.