கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கும் பிரபல வீரர்!

இந்தியக் கிரிகெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் இருந்துவந்த ஹர்பஜன்சிங் அனைத்துவிதக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அழகான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுத்த அனைவருக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்து இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கிய ஹர்பஜன் சிங் பின்னர் பல போட்டிகளில் தனது திறமையான பந்துவீச்சினால் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை டெஸ்ட் கிரிகெட்டில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் டி20 போட்டியில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2015 க்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத இவர் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று விளையாடி வந்தார். முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் தொடர்ந்து கொல்கத்தா அணியிலும் விளையாடிவந்த இவர் கடந்த 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் தமிழ் ரசிகர்களுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிவரும் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையடுத்து தற்போது “பிரண்ஷிப்“, “டிக்கிலோனா“ போன்ற தமிழ் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பை பார்க்க முடிந்தது.

தற்போது 41 வயதான ஹர்பஜன் சிங் அனைத்துவிதக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் இனி ஹர்பஜனை கிரிக்கெட் களத்தில் பார்க்கமுடியாது. ஆனால் சினிமாவில் அவர் தொடர்வார் என்றும் கொல்கத்தா ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு அவர் ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.