`மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்!’- ஜாமியா மாணவருக்காகக் கலங்கிய ஹர்பஜன் சிங்.
- IndiaGlitz, [Friday,December 20 2019]
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்திவருகின்றனர். போராட்டத்தில், சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர், தன் இடது கண் பார்வையை இழந்தார். இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மினாஜுதின் பேசிய வீடியோவைப் பகிர்ந்து, பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மினாஜுதின் பேசியதைப் பகிர்ந்து, ''மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம். தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவர் கூறும்போது, கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது. டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
வன்முறை தொடர்பாக, ''நான் கூறுவது எல்லாம் அமைதியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். வன்முறை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இது யாருக்கும் நன்மை செய்யப்போவதில்லை. வன்முறைக்கு மாற்றாக, பிரச்னைக்குத் தீர்வுக் காண வேறு வழிகள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை சமூக வலைதளங்களின் வழியாகப் பதிவுசெய்து வருவது கவனிக்கத்தக்கது.
His crime is that he is a human.. it so sad to hear from him what he is gone thru..very sad for what’s happening in delhi this needs to stop https://t.co/M08JdRH8kc
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 19, 2019