சென்னை இளைஞர்களால் ஏமாற்றப்பட்டாரா ஹர்பஜன்சிங்? பரபரப்பை ஏற்படுத்திய ரூ.4 கோடி விவகாரம்!
- IndiaGlitz, [Thursday,September 10 2020] Sports News
சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக ஹர்பஜன்சிங் பதிவு செய்திருந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் சென்னையைச் சேர்ந்த மகேஷ் மற்றும் பிரபா சேகர் ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இதற்காக இவர்கள் தங்களுடைய அசையா சொத்தையும் ஈடாக கொடுத்துள்ளனர்
இந்த நிலையில் பணத்தை அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி கொடுக்காததால் நீலாங்கரை காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மகேஷ் மற்றும் பிரபா சேகர் ஆகிய இருவரும் ஆஜராக போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து தான் கைது செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் மகேஷ், சென்னை உயர் மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் வாங்கிய ரூ.4 கோடி கடனுக்கு 4 கோடியே 5 லட்சம் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும் மேலும் வட்டித் தொகையைக் குறைத்துக் கொள்வது குறித்து ஹர்பஜன்சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தையின்போது தொகை நிரப்பப்படாமல் 8 காசோலைகளை ஹர்பஜன்சிங்கிடம் கொடுத்ததாகவும் அந்த காசோலையில் 25 லட்ச ரூபாய் நிரப்பி ஹர்பஜன்சிங் வங்கியில் செலுத்தியதாகவும் ஆனால் அந்த காசோலைக்கு பணம் தரவேண்டாம் என தான் வங்கிக்கு கடிதம் கொடுத்து இருந்ததால் அந்த காசோலை திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து காசோலை திருப்பி அனுப்பப்பட்டதால் ஹர்பஜன்சிங் மோசடிப் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாரின்பேரில் தன்னை போலீசார் கைது செய்ய முயற்சிப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி விசாரித்தபோது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹர்பஜன்சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆரம்பகட்ட விசாரணை மட்டுமே செய்து வருகின்றனர் என்றும் இப்போதைக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஒருவேளை போலீசார் வழக்கு பதிவு செய்தால் அப்போது மீண்டும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உள்ளார்