ஒரு படத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனம் வருவதை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கின்றோம். ஆனால் படம் முழுவதும், ஹீரோ, ஹீரோயின் முதல் காமெடி நடிகர்கள் வரை என ஒட்டுமொத்த படக்குழுவும், படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும் படம் இதுவரை தமிழில் வெளிவந்ததுண்டா? இந்த சந்தேகத்தை போக்கியுள்ளது 'ஹரஹர மஹாதேவகி'. படம் ஆரம்பித்த முதல் ரீல் முதல் கடைசி காட்சி வரை உள்ள வசனங்களில் எத்தனை வசனங்கள் இரட்டை அர்த்தம் இல்லாமல் உள்ளது என்பதை எளிதாக எண்ணி விடலாம்.
தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சி மேல் பழிபோட வெடிகுண்டு வைக்க திட்டமிடும் ஒரு அரசியல்வாதி, ரூ.2000 கள்ள நோட்டை லாவகமாக மாற்றும் ஒரு கும்பல், காதலன், காதலி பிரேக் அப், குழந்தையை கடத்தி வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்கும் ஒரு கடத்தல்காரன் என ஒரு படத்தில் நான்கு கிளைக்கதைகள். இந்த நான்கு கதைகளில் உள்ள கேரக்டர்களும் கடைசியில் 'ஹரஹர மகாதேவகி' என்ற ரிசார்ட்டில் வந்தடைகின்றனர். அங்கு என்ன நடக்கின்றது என்பதுதான் கிளைமாக்ஸ்
கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணியின் காதல் 'கடவுளே கடவுளே' (இந்த வசனத்தை கேட்டவுடன் அண்ணாமலை குஷ்பு ஞாபகம் வரவேண்டும்) வசனத்தில் ஆரம்பித்து பின்னர் பிரேக் அப்-இல் முடிகிறது. பிரேக் அப்-ஐ முடித்து கொள்ள கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி கொடுத்த பரிசுப்பொருட்களை ஒரு பேக்கில் வைத்து கொண்டு நிக்கியை சந்திக்க செல்கிறார். முதல்வர் ஆக துடிக்கும் ரவிமரியாவும், அவருடைய எடிபிடியாக நமோ நாராயணனும் வெடிகுண்டுடன் கூடிய பேக்'கை மொட்டை ராஜேந்திரன் - கருணாகரனிடம் கொடுத்து அரசியல் மேடை ஒன்றில் வைக்க திட்டமிட்டு கொடுக்கின்றனர்.. பாலசரவணன் ரூ.1 கோடி கள்ள நோட்டை ஒரு பேக்கில் வைத்து எடுத்து வருகிறார். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க பெற்றோர்கள் ஒரு பேக்கில் ஒரு கோடியை வைக்கின்றனர். இதில் என்ன விசேஷன் என்றால் இந்த நான்கு பேக்குகளும் அரசு இலவச பொருட்கள் கொடுக்க பயன்படுத்தும் பேக். இந்த பேக் இந்த நான்கு பேரிடம் இருந்து மாறி மாறி கடைசியில் எந்த பேக்கில் என்ன இருக்கின்றது என்று அவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டு, பார்க்கின்ற நமக்கும் குழப்பம் ஏற்பட்டு ஒரு வழியாக கடைசியில் அந்த வெடிகுண்டு வெடித்ததா? இல்லையா? என்பதை திரையில் பார்த்து கொள்ளுங்கள்
கெளதம் கார்த்திக் சாவு வீட்டு விசேஷங்களை காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் தொழில் செய்பவராக இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு நண்பர் சதீஷ். கெளதம் கார்த்திக்கு நல்லவேளையாக காமெடி நன்றாக வருகிறது. நிக்கி கல்ராணியை இவர் சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்புலும் ஒரு இரட்டை அர்த்த காட்சி. நிக்கியை கவர இவர் செய்யும் முயற்சிகள், குறிப்பாக நிக்கியின் எச்.ஓ.டியிடம் இவர் பேசும் காட்சியில் இவரது நடிப்பு ஓகே.
நாயகி நிக்கி கல்ராணி உடையில் மட்டுமின்றி வசனத்திலும் கவர்ச்சி காட்டுகிறார். ஜாலியான கேரக்டரை ஜாலியாக செய்துள்ளார். அவருக்கு தோழியாக வருபவர் அவரை சாப்பிட்டுவிடுவார் போல..
சதீஷ் அவ்வப்போது டைமிங் ஜோக் சொல்லி சிரிக்க வைக்கின்றார். கருணாகரன் - மொட்டை ராஜேந்திரன் காமெடி குறித்து சொல்லவே தேவையில்லை, அவர்களுடைய கெட்டப் மற்றும் காஸ்ட்யூம்களை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. பாலசரவணன் கள்ள நோட்டை மாற்றும் தந்திரம் ரசிக்கும் வகையில் உள்ளது. கிளைமாக்ஸில் இவருடைய பங்கும் பெருமளவு உண்டு
குழந்தையை தொலைத்துவிட்டு சோகமாக இருக்கும் தம்பதிகளும், குழந்தையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆர்.கேசுரேஷும் சீரியஸாக நடித்துள்ளதாக அவர்கள் மட்டுமே நம்பலாம். இந்த படத்தின் திருஷ்டிக்காட்சிகள் இவை
முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கு சிரிக்கவே நேரமில்லை என்பதால் இசை, பாடல்கள், ஒளிப்பதிவை ரசிக்க டைம் ஒதுக்க முடியவில்லை. இருப்பினும் ஒளிப்பதிவாளர செல்வகுமாரின் கேமிரா பளிச். பாலமுரளி பாலுவின் பாடல்கள் சுமார் தான். ஆனால் ஒரு காமெடி படத்துக்கு தேவையான பின்னணி இசை கச்சிதம். எடிட்டரின் கட்டிங் சரியான அளவில் உள்ளது.
அறிமுக இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாருக்கு வாழ்த்துக்கள். ஒரு அடல்ட் காமெடி படத்தை கொஞ்சம் கூட போரடிக்காமல் கொடுத்துள்ளார். ஆனால் ஒருசில இடங்களில் இரட்டை அர்த்த காமெடி கொஞ்சம் எல்லை மீறி போகும் அளவுக்கு பச்சையாக உள்ளது. குறிப்பாக வேஷ்டிக்குள் பாம்பு புகுவது, ரம் பாட்டிலை மறைத்து வைக்கும் இடம் ஆகியவற்றை சொல்லலாம். சென்சாரில் எப்படி அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை
தயவுசெய்து யாரும் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்துவிட வேண்டாம். இதை கெளதம் கார்த்திகே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நண்பர்கள் அல்லது தோழிகளுடன் படம் பாருங்கள். இரண்டு மணி நேரம் சிரிப்புக்கு உத்தரவாதம்
மொத்தத்தில் 'ஹரஹர மஹாதேவகி', ஹாஷ்யங்கள் கலந்த ஒரு அடல்ட் தேவகி
Comments