பிறந்த நாள் வாழ்த்துக்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருகாலத்தில் தமிழ் சினிமா பாலந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களிடன் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இளையதலைமுறை இயக்குனர்கள் தமிழ் சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு செல்கின்றனர். குறிப்பாக சர்வதேச தரத்துடன் உலக சினிமாக்களுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழ் சினிமா இன்று வளர்ந்ததற்கு காரணம் இந்த இளையதலைமுறை இயக்குனர்கள்தான்.
பாண்டியராஜ், வெற்றிமாறன், அட்லி, சமுத்திரக்கனி, சசிகுமார், போன்ற பல தரமான இளையதலைமுறை இயக்குனர்களால் இன்று தமிழ்சினிமா தலைநிமிர்ந்து உள்ளது. இந்த வரிசையில் வித்தியாசமான பாணியில் கதை சொல்லி, அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த ஒரு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் கார்த்திக் சுப்புராஜூக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனர் ஆகவேண்டும் என்ற டிரெண்டை உடைத்து, குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இருந்து நேராக இயக்குனர் ஆகலாம் என்ற டிரெண்டை கொண்டு வந்தவர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' மிகப்பெரிய வெற்றி பெற்றது. கதை சொல்லும் விதம், வித்தியாசமாக அமைக்கப்பட்ட காட்சிகள், கடைசி வரை ஊகிக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற சஸ்பென்ஸ், விஜய்சேதிபதியின் அபாரமான நடிப்பு ஆகியவை பீட்சா படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது.
இதன்பின்னர் இவர் இயக்கிய இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா' படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியே இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார் என்பது தெரிந்ததே. பாபிசிம்ஹா நடித்த வில்லன் கேரக்டரை தனக்கு முன்பே சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியதில் இருந்தே அந்த கேரக்டர் எந்த அளவுக்கு சிறப்பாக அமைந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கேரக்டரில் நடித்த பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்றாவது படமான 'இறைவி' படமும் அவரது பாணியிலே இருந்தாலும் இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் பெண்களின் தைரியத்தை சிறப்பாக வெளிப்படுத்திய படம்.
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. அவரது முந்தைய படங்கள் போலவே அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெற்று இந்திய சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு சிறப்பான இடத்தை பெற இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments