இயக்குனர் கே.பாக்யராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,January 07 2017]
இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர், இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பள்ளியில் இருந்த வந்தவர் பாக்யராஜ். '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 'கன்னி பருவத்திலே' படத்தில் ஹீரோவாக நடித்த பாக்யராஜ், 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தின் நாயகனும் இவரே.
அதன் பின்னர் அவர் இயக்கி நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான். குறிப்பாக 'மெளன கீதங்கள்', 'முந்தானை முடிச்சு', இது நம்ம ஆளு' போன்ற படங்கள் இன்றளவும் போற்றப்படும் படங்களாக உள்ளது.
திரைத்துறை மட்டுமின்றி பத்திரிகை துறையிலும் பாக்யராஜ் வெற்றிகரமாக காலூன்றியவர். 'பாக்யா' என்ற வார இதழை கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த இதழில் வெளிவரும் கேள்வி-பதில் பகுதியில் குட்டி குட்டி கதைகளாக பதில் சொல்லி அசத்தி வருகிறார் பாக்யராஜ்.
மேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தனது கலையுலக வாரிசு என்று பாக்யராஜை சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்த பாக்யராஜுக்கு இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது
தற்போது ஒருசில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமா, அரசியல், பத்திரிகை என மூன்று துறைகளிலும் ஈடுபட்ட கே.பாக்யராஜூக்கு மீண்டும் ஒருமுறை நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.