'ஜானகி' என்னும் அதிசய கானக்குயிலின் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
'16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடல், 'தேவர் மகன்' படத்தில் இடபெற்ற 'இஞ்சி இடுப்பழகி' பாடல் உள்பட நான்கு தேசிய விருதுகள் பெற்ற கானக்குயில் ஜானகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. இன்றைய அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய சில அரிய முத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.
* ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் 1938ஆம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது மூன்றாவது வயதில் இருந்தே பாடத் தொடங்கினார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது. பத்து வயது வரை முறையாக இசையை கற்றவர்
* வி.சந்திரசேகர் என்ற கலைஞர் கொடுத்த ஊக்கத்தினால் சென்னை வந்த ஜானகி, ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார். இவர் பாடிய முதல் பாடல் 'விதியின் விளையாட்டு' என்ற படத்திற்காக. ஆனால் அந்த படம் விதியின் விளையாட்டு காரணமாக வெளியாகவில்லை. எனவே ஜானகி பாடி முதலில் வெளியானது ஒரு தெலுங்கு பாடல். இந்த பாடலை அவர் பிரபல பாடகர் கண்டசாலாவுடன் இணைந்து பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
* முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100 பாடல்களை பாடிய ஜானகி, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி உள்பட 17 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.
* கொஞ்சும் சலங்கை` திரைப்படத்துக்காக பாடிய சிங்கார வேலனே` என்ற பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதோடு, அந்த பாடலின் இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது. 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே`, செந்தூரப் பூவே`, காற்றில் எந்தன் கீதம்`, நெஞ்சினிலே நெஞ்சினிலே`, ராதைக்கேற்ற கண்ணனோ' போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் காலத்தால் அழியாத காவிய பாடல்கள் ஆகும்
* தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ள ஜானகி ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
* பாடல்கள் பாடியதற்காக 4 தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை ஜானகி பெற்றுள்ளார். கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது, 14 முறை கேரள அரசு விருது, 10 முறை ஆந்திர அரசு விருது, 7 முறை தமிழக அரசு விருது, இலங்கையில் அளிக்கப்பட்ட ஞான கான சரஸ்வதி` என்ற பட்டம் ஆகியவை உள்பட ஜானகி பெற்ற விருதுகளும், பட்டங்களும் ஏராளம். கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷண் விருதை இவருக்கு அறிவித்தது. ஆனால் மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் தனக்கு தேவையில்லை என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.
* மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்பட பல திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய ஜானகி பிரபல இசை மேதைகளான ஷெனாய் கலைஞர் பிஸ்மில்ல கான், வயனில் ஞானி எம்.கோபாலகிருஷ்ணன், நாதஸ்வர மேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், புல்லாங்குஷல் விற்பன்னர் ஹரிபிரசாத் செளராசியா ஆகியோர்களின் இசையிலும் பாடியுள்ளார்.
* ஜானகி தான் பாடிய பாடல்களில் பாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்த பாடலாக கூறியது 'ஹேமாவதி' என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 'சிவ சிவ என்னாட' என்ற பாடல் தானாம். எல்.வைத்தியநாதன் இசையமைத்த இந்த பாடல் தோடி மற்றும் அபோகி ஆகிய ராகங்களில் அமைந்தது. இந்த பாடலை பாடுவதற்கு முன்னர் ஜானகி பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்தனை செய்தாராம்.
* ஜானகி கடந்த 1958ஆம் ஆண்டு வி.ராம்பிரசாத் என்பவரை திருமணம் செய்தார். வி.ராம்பிரசாத் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ஜானகி-ராம்பிரசாத் தம்பதிக்கு முரளிகிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.
*ஜானகி அவர்கள் நான்கு தலைமுறை பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். டி.எம்.செளந்திரராஜன், கண்டசாலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, மனோ, உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன் உள்ளிட்ட பல பாடகர்களுடன் அவர் இணைந்து பாடியுள்ளார். மேலும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷூடன் இணைந்து 'அம்மா அம்மா' என்ற பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து தனுஷ் கூறியபோது, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் என்னைப் பிரபலப்படுத்தினாலும், பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஜானகி அம்மாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகக் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.
* 'தென் இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் ஜானகி, வாழ்வில் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி, பாடப் போவதில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தார். '10 கல்பநகள்” என்ற மலையாள திரைப்படத்திற்காக அவர் பாடிய “அம்மபூவினு” என்ற பாடல் ஜானகி பாடிய கடைசி பாடல். தனது ஓய்வு முடிவு குறித்து ஜானகி கூறியபோது, எனது கடைசி பாடல் மலையாள மொழியில் தான் இருக்க வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை. நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் அது தானாக அமைந்தது என்று கூறினார்.
ஜானகி என்ற இசைமேதை இனி பாடுவதில்லை என்ற முடிவால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தமடைய தேவையில்லை. ஏனெனில் அவர் பாடிய 48ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கேட்டு முடிக்கவே வாழ்நாள் போதாது. ஜானகி அவர்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இளையதலைமுறை பாடகர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நால் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout