கவுதம் மேனனின் காதலும் ஆக்சனும்

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

இயக்குனர் கவுதம் மேனன் படங்கள் என்றாலே ஒன்று காதல் அல்லது ஆக்சன் படங்களாகத்தான் இருக்கும். இவர் இயக்கிய ஒரே த்ரில் படமான 'நடுநிசி இரவில்' திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் மீண்டும் ரொமான்ஸ், ஆக்சனுக்கு இவர் மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இயக்குனர்களின் ரொமான்ஸ் படங்களுக்கும் கவுதம் மேனனின் ரொமான்ஸ் படங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இவர் படங்களில் காதல் முதல் பார்வையிலேயே வந்துவிடும். பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்ற ஃபார்முலா இவரிடம் கிடையாது. அதேபோல் இவரது படங்களில் உள்ள ஹீரோ, வேலைவெட்டி இல்லாமல் வீட்டுக்கு பாரமாய் நண்பர்களுடன் அரட்டை அடித்து ஊரை சுற்றும் ஒரு சராசரி இளைஞனாக இருக்க மாட்டான். 'மின்னலே' ராஜேஷ் ஆகட்டும், 'வாரணம் ஆயிரம்' சூர்யாவாகட்டும், 'விண்ணை தாண்டி வருவாயோ' கார்த்திக் ஆகட்டும் அவரவர்களுக்கு ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தோடு காதலும் இணைந்திருக்கும். காதல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் ஹீரோவின் லட்சியத்திற்கும் இவரது கதையில் முக்கியத்துவம் இருக்கும்.

அதேபோல் இவரது படங்களின் ஹீரோயின்கள் ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட் பாடும் சராசரி நாயகிகளாக இருக்க மாட்டார்கள். மின்னலே' ரீனா, 'காக்க காக்க' மாயா, 'வாரணம் ஆயிரம்' மேக்னா, 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி ஆகியோர்களின் கேரக்டர்களில் ஒரு அழுத்தம் இருக்கும். காதலை கண்ணால் சொல்லும் அளவுக்கு நடிப்பு இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக இவர் தனது ஹீரோயின்களை திரையில் அழகாக காட்டுவதற்கு கூடுதல் மெனக்கிடுதல் செய்திருப்பார்.

இவரது ரொமான்ஸ் படங்களில் உள்ள பல காட்சிகளில் ஒருசில காட்சிகள் நிச்சயம் நமது வாழ்வை கடந்திருக்கும். அந்த காட்சியை பார்க்கும்போது அந்த இடத்தில் நம்மை வைத்து பார்ப்பதில் தவற மாட்டோம். அதுதான் இவரது படங்களின் வெற்றிக்கு காரணம். டைட்டிலை பார்க்காமல் ஒருவர் இவரது படத்தை பார்க்க சென்றால் ஒருசில நிமிடங்களில் இது கவுதம் மேனன் படம் தான் என்பதை நிரூபிக்கும் காட்சிகள் நிச்சயம் இருக்கும்.

கவுதம் மேனனின் ஆக்சன் படங்களை பார்த்தால் ஒரு விஷயத்தில் அவர் அதிக கவனம் செலுத்தியிருப்பார். அதுதான் ஹீரோ கேரக்டரை விட வில்லன் கேரக்டர் பலமாக இருப்பது. ஒரு ஆக்சன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான விஷயம் வில்லன் பலமுள்ளவனாக இருக்க வேண்டும். 'காக்க காக்க' ஜீவன், வேட்டையாடு விளையாடு' டேனியல் பாலாஜி, 'பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா, 'என்னை அறிந்தால்' அருண்விஜய் ஆகியோர்களின் கேரக்டர்கள், படத்தில் பல காட்சிகளில் ஹீரோவை டாமினேட் செய்யும். அந்த சவாலை முறியடிப்பதுதான் ஹீரோவின் திறமை. கவுதம் மேனனின் இந்த ஃபார்முலாவுக்கு சூர்யா, கமல்ஹாசன், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் ஈகோ இன்றி ஒத்துழைப்பு கொடுத்ததும் இந்த படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம்.

அதேபோல் கவுதம் மேனன் படத்தில் உள்ள இன்னொரு ஸ்பெஷல் படத்தின் வசனத்தில் ஆங்காங்கே ஆங்கிலத்தை கலப்பது. ஆனால் அந்த ஆங்கில வசனங்கள் கேலி செய்யப்படாமல் ரசிக்கும்படி இருப்பதும் இவரது தனித்துவங்களில் ஒன்று.

மேலும் இவர் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் இவரது படங்களின் டைட்டில் அழகிய தமிழில் கவிதைத்தனமாக இருக்கும். பெரும்பாலும் பாடல் வரிகளாக இருந்தாலும் கதைக்கு பொருத்தமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.

அதேபோல் இவரது படங்களின் பாடல்கள் பெரும்பாலும் ஹிட் தான். தாமரைதான் இவர் படத்திற்கு அதிக பாடல்களை எழுதியிருப்பார். தாமரையின் கற்பனை கவிதை வரிகளும், அந்த கவிதைக்கு ஈடுகொடுக்கும் வகையிலான கேமிராவின் காட்சிகளும் மனதில் ஆழப்பதிந்துவிடும்.

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்ற பெயரை பெற்ற கவுதம்மேனனின் படங்கள் கடந்த சில வருடங்களாக வெளிவராதது சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான். மீண்டும் அவர் முன்பு போல் குறைந்தது வருடத்திற்கு ஒரு படமாவது வெளியிடவேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது. அவர் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பிறந்த நாளில் அவருக்கு மென்மேலும் வெற்றி கிட்ட நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

More News

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பாலா பட நாயகி

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள 'எஸ்கே 15' படத்தில் ஏற்கனவே கல்யாணி பிரியதர்ஷன், ஆக்சன் கிங் அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ள

இன்றுமுதல் நிறைவேறுகிறது சத்யராஜ் மகளின் கனவு!

சத்யராஜின் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் என்பதும், அவர் லாப நோக்கமின்றி இயங்கி வரும் உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவர் என்பதும் தெரிந்ததே

அமலாபால் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் கேரக்டர்!

நடிகை அமலாபால் தற்போது 'ஆடை', மற்றும் 'அதோ அந்த பறவை' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.

நாற்பதிலும் வெற்றி பெற ரஜினியை துணைக்கு அழைக்கும் கமல்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள கமல்ஹாசன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற ரஜினி போன்ற நல்லவர் துணை தேவை என்று கூறியுள்ளார்.

'தல 59' படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நடிகர்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்