இயக்குனர் பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமையான நடிகராவார் என்ற நிலை கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்தது. அவரது மறைவிற்கு பின் இயக்குனர் பாலா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளார். பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒரு நடிகர் நடித்துவிட்டால், அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறிவிடுவார். இதற்கு உதாரணம், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா என்று பலரை கூறலாம். அப்படிப்பட்ட திறமையான இயக்குனர் பாலா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் அவருக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'சேது' படம் பாலா, விக்ரமுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே ஒரு திருப்புமுனை என்று கூறலாம். தேசிய விருது பெற்ற இந்த படம் ஒவ்வொரு பார்வையாளரையும் கட்டிப்போட்டது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது.

விக்ரமின் திரையுலக வாழ்விற்கு திருப்புமுனை கொடுத்த இயக்குனர் பாலா, இரண்டாவது படமான 'நந்தா' படத்தின் மூலம் சூர்யாவுக்கு திருப்புமுனையை கொடுத்தார். சூர்யா நடித்த முதல் வித்தியாசமான கேரக்டர் தான் நந்தா. இதனையடுத்து விக்ரம், சூர்யா இருவரையும் இணைத்து பாலா இயக்கிய படம் 'பிதாமகன்'. இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியது.

அடுத்ததாக பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம் அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்தது. ஆர்யாவுக்கும் இந்த படம் நல்ல ஏற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து பாலா இயக்கிய 'அவன் இவன்', 'பரதேசி' ஆகிய படங்கள் பெரிய அளவில் வர்த்தக வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. குறிப்பாக 'பரதேசி' திரைப்படம் அதர்வாவுக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தின் நாயகியான வரலட்சுமியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படமும் பாலாவின் பாணியில் அமையும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கும் மிகச்சில இயக்குனர்களில் ஒருவராகிய பாலாவின் புகழ் இன்னும் பலமடங்கு பெருக இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.