இந்த நூற்றாண்டின் மார்க்கண்டேயன் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Sunday,July 23 2017]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தந்தை சிவகுமார் பெரிய நடிகராக இருந்தபோதும் சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. சிவகுமாருடன் ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு சென்றததில்லை என்பதே இதற்கு சான்றாக இருந்தது. ஆனால் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் சூர்யா வேறு வேலையில் இருந்தாலும் காலம் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆம், இயக்குனர் வசந்த் தனது நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை அறிமுகம் செய்தார். இந்த படத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர்களை போலவே சூர்யாவின் திரையுலக வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. முதல் படமான நேருக்கு நேர்' வெற்றி பெற்றவுடன் அதன் பின்னர் அவர் நடித்த 'பூவெல்லாம் கேட்டு பார்', ஃப்ரெண்ட்ஸ்', ''நந்தா', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'கஜினி', 'வேல்', 'வாரணம் ஆயிரம்', 'அயன்', 'சிங்கம்', '7அம் அறிவு', போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.
சூர்யா ஒரு கேரக்டருக்காக மெனக்கிடுவதில் கமல் போன்றவர். கேரக்டருக்காக உடலை வருத்தியும், சிக்ஸ்பேக் உருவாக்குவதும் அவருக்கு கை வந்த கலை. உலகநாயகன் கமல்ஹாசன் வசனமே இல்லாமல் கூட தன்னுடைய நடிப்பு மூலம் சிறந்த நடிகராக காட்டிக்கொள்வதை போல தானும் இருக்க வேண்டும் என்று கருதுவதாக ஒரு பேட்டியில் கூறியவர் சூர்யாம். மேலும் சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புள்ள மகன், அன்பான அப்பா, காதலான கணவன், சிறந்த நடிகர், ரசிகர்களுக்கு உண்மையானவர், கொடை வள்ளல் போன்ற குணங்களை கொண்டுள்ள சூர்யாவுக்கு பார்ட்டி, ட்ரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதுதான் சூர்யாவின் வழக்கம்.
காலையில் ஹெல்த் ட்ரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி என இந்த சாப்பாட்டு முறை தான் சூர்யாவை இன்றும் 25 வயது இளைஞனாக காட்டி வருகிறது. இதனால்தான் இந்த நூற்றாண்டின் மார்க்கண்டேயன் என்று சூர்யாவை அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
சூர்யா ஈரானியப் படங்களின் தீவிர ரசிகர். எப்பொழுதும் ஈரானிய படங்களை ஒருபோதும் மிஸ் பண்ணுணதே கிடையாது என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். படப்பிடிப்பு கேன்சலானால் உடனே வீட்டிற்கு வந்து சூர்யா பார்க்கும் படம் ஈரானிய படமாகத்தான் இருக்கும்.
பெரிய சினிமா ஸ்டாராக இருந்தபோதும் லயோலா கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பர்களை இன்னும் மறக்காமல் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர் சூர்யா. கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் ஆகிய விழா நாட்களில் நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களை நேரில் சந்திக்கும் வழக்கமும் அவருக்கு உண்டு.
ஏழை எளிய குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்று வாழ்க்கையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பது சூர்யாவின் தீவிர கொள்கைகளில் ஒன்று. இதற்காக அவர் கடந்த 2006ஆம் ஆண்டு அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பை தொடங்கினார். தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினற்கும் கொண்டு சேர்ப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். மேலும் இந்த அமைப்பு, சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி ஒரு மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கனவுகளை இந்த அமைப்பு நனவாக்கி வருகிறது.
சூர்யா நடிகராக மட்டுமின்றி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். அவரது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த '36 வயதினிலே', 'பசங்க 2', '24' ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது அவர் 'தானா சேர்ந்த கூட்டம் மற்றும் 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் சூர்யா, விஜய் மில்டன் இயக்கிய 'கடுகு' என்ற படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று இந்த படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்தார். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.
நந்தா, கஜினி, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களுக்காக தமிழக் அரசின் சிறந்த நடிகர் விருதினை பெற்றுள்ளார். மேலும் சைமா, எடிசன், பிலிம்பேர், விஜய், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சூர்யாவின் திரைப்பட வாழ்க்கயில் அவரது கிராஃப் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அவரது உண்மையான உழைப்பும், தொழில் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடும் அவரை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. சூர்யா இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து தேசிய விருது உள்பட பல விருதுகளை வாங்கி குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.