சூர்யா - 40. தமிழ் சினிமாவின் இளம் மார்க்கண்டேயன்

  • IndiaGlitz, [Thursday,July 23 2015]

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நடிகர் என்றால் சிவகுமார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய மூத்த மகனும், பிரபல நடிகருமான சூர்யா, இன்று 40வது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். அவருக்கு முதலில் நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தமிழ் சினிமாவில் சூர்யா அடியெடுத்து வைத்த வருடம் 1997. இளையதளபதி விஜய் நடித்த 'நேருக்கு நேர்' படத்தில்தான் சூர்யா அறிமுகமானார். முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன். சூர்யா நடிகராக அறிமுகமான காலகட்டத்தில் இளையதலைமுறை நடிகர்களின் போட்டி மிக அதிகம். விஜய், அஜீத், பிரசாந்த், விக்ரம், அர்ஜூன், அரவிந்தசாமி, பார்த்திபன், முரளி போன்ற இளையதலைமுறை நடிகர்களும், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்களும் கொடிகட்டி பறந்த காலம். இந்த போட்டியான காலகட்டத்தில் சினிமாவிற்கு நுழைந்த சூர்யாவுக்கு சிவகுமாரின் மகன் என்ற தகுதி மட்டுமே இருந்தது.


இதனால் ஆரம்பகாலகட்டத்தில் கொஞ்சம் தடுமாறிய சூர்யா, பின்னர் சீனியர் நடிகர்களின் வழிகாட்டுதலின் பேரில் தனக்கென தனித்திறமையை வளர்த்து கொண்டார். தமிழ் சினிமாவில் விக்ரமுக்கு திருப்புமுனையை 'சேது' படத்தின் மூலம் ஏற்படுத்திய தேசிய விருது பெற்ற பாலா, சூர்யாவுக்கும் 'நந்தா' படத்தின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். நந்தா படத்திற்கு பின்னர்தான் சூர்யா, முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.

பாலாவின் மோதிரக்கையால் குட்டு வாங்கிய சூர்யா, அதன் பின்னர் சவாலான கதாபாத்திரங்களை மிக அசாலட்டாக நடித்தார். அமீரின் 'மெளனம் பேசியதே', கவுதம் மேனைன் 'காக்க காக்க', மீண்டும் பாலாவின் இயக்கத்தில் 'பிதாமகன்', மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து', ஆகிய படங்கள் சூர்யாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக 'காக்க காக்க' படத்தில் அன்புச்செல்வனாக அனைவரின் கண்முன்னால் வந்து நின்றார் சூர்யா

இதன்பின்னர் சூர்யாவை தமிழ் சினிமாவின் முன்னணி இடத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கஜினி'. இந்த படத்தில் சஞ்சய் ராமசாமி என்ற ஸ்டைலிஷான கேரக்டரிலும், பின்னர் ஞாபக மறதியுடன் பழிவாங்கு வாங்கும் வெறியுடன் அலையும் கேரக்டரிலும் நடித்து அனைவரையும் அசத்தினார். இன்று வரை சூர்யாவின் பெஸ்ட் படம் என்றால் அது 'கஜினி'தான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்த் காலக்கட்டத்தில்தான் சூர்யாவை முழுமையான கமர்ஷியல் நடிகராக இயக்குனர் ஹரி மாற்றினார். ஆறு படத்தின் மூலம் தொடங்கிய சூர்யா-ஹரியின் சினிமா உறவு, அதன்பின்னர் வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என துரைசிங்கத்தின் கர்ஜனை தொடர்ந்து கொண்டே வருகிறது. சூர்யா-ஹரி இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த 'அயன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனாலும், அவருடன் சூர்யா இணைந்த அடுத்த படமான 'மாற்றான்' படத்தில் சூர்யா மிக கஷ்டப்பட்டு ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருந்தாலும், தோல்வி கண்டது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் சூர்யா சமீபத்தில் 'மாஸ்' என்ற சிறந்த எண்டர்டெயின்மெண்ட் படத்தை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தினார்.

கடந்த 1999ஆம் ஆண்டு முதன்முதலாக சூர்யா, ஜோதிகாவுடன் நடித்த படம் 'பூவெல்லாம் கேட்டுப்பார்'. இந்த படத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரி பெரிதும் பெரிதும் பேசப்பட்டதால்தான்
என்னவோ, இருவரும் உண்மையிலே காதலிக்க தொடங்கிவிட்டனர். அதன் பின்னர் சூர்யா-ஜோதிகா ஜோடி உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் மற்றும் சில்லுனு ஒரு காதல் என மொத்தம் ஏழு படங்களில் ஜோடியாக நடித்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் 2006ஆம் ஆண்டு சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது. இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ், தியா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் முதல் எழுத்துக்களை வைத்துதான் 2D என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறையுடன் கூடிய தொண்டு செய்பவராகவும் விளங்கி வருகிறார். அகரம் என்ற பெயரில் ஒரு பொதுநலன் கருதிய, லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான ஏழைக்குழந்தைகள் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் அடிப்படை கல்வி முதல் ஐ.ஏ.எஸ் கல்வி வரை பெற்றுள்ளனர். நிதி பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக அகரம் பவுண்டேஷன் இப்போதும் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 2002ஆம் ஆண்டு நந்தா படத்திற்காகவும், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை கஜினி மற்றும் வாரணம் ஆயிரம் படங்களுக்காகவும், வாங்கிய சூர்யா, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களுக்காக பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ள சூர்யா, தேசிய விருதை பெறும் அளவுக்கு தகுதியையும் வளர்த்துள்ளார். எனவே மிக விரைவில் சூர்யாவுக்கு தேசிய விருது உள்பட பல கெளரவங்கள் கிடைக்க இந்த 40வது பிறந்த நாளில் அவரை மீண்டும் வாழ்த்துகிறோம்.

More News

அஜீத் தங்கைக்கு ஜோடியாகும் 'மங்காத்தா' நடிகர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே...T

நடிகர் விஷால் திடீர் உண்ணாவிரதம்

கேரள மாநிலத்தில் தெருவில் தெரியும் நாய்களால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தெரு நாய்களை கொல்ல வேண்டும்...

தாத்தா சிவாஜியுடன் மோதும் பேரன் விக்ரம்பிரபு?

சிவாஜி குடும்பத்தின் கலை வாரீசான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை...

ஆஸ்கார் நாயகனின் பாராட்டை பெற்ற 'பாகுபலி'

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது சமீபத்தில் வெளியான...

பெயரை மாற்றி ரீ எண்ட்ரி ஆகியுள்ள பி.வாசு மகன்

ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, சந்திரமுகி, விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல்...