சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவருடைய அரசியல் பார்வையும்...
- IndiaGlitz, [Tuesday,December 12 2017]
இன்றைய தமிழகம் ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. ஆளுமை அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவும், சாணக்கிய அரசியல் செய்த கருணாநிதியின் உடல்நலமின்மையும் தமிழகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப இப்போதைய அரசியல்வாதிகள் தகுதியானவர்களா? இல்லையா? என்பதை மக்கள் அடுத்த தேர்தலில் முடிவு செய்வார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த வெற்றிடத்தை பிடிக்க கோலிவுட் நடிகர்களும் முயற்சித்து வருகின்றனர். அவர்களில் முதல் இடத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பெரும்பாலும் கூறுவது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத்தான்
ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த இருபது வருடங்களாக கூறி வருவதும், அவர் வருவது எப்போது என்று வழிமேல் விழிவைத்த அவரது ரசிகர்களுக்கு வயது ஐம்பதை தாண்டிவிட்ட நிலையிலும் இனிமேலும் அவர் வருவாரா? என்று ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வர ஆண்டவன் சிக்னல் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த ரஜினிக்கு அந்த சிக்னல் கிடைத்துவிட்டதாகவும், மிக விரைவில் அவருடைய அரசியல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதை ரஜினியின் சகோதரர் சத்தியநாராயாண ராவ் அவர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளார்
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து நேரடி அரசியலில் குதிக்காவிட்டாலும் அவர் பல மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும், திரைப்படங்களிலும் அரசியல் பேசியுள்ளார். ரஜினியின் பிறந்த நாளை இன்று உலகமே கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது வாழ்த்துக்களை கூறிவிட்டு அவருடைய ஒருசில அரசியல் வசனங்கள் தற்போது பார்ப்போம்
ரஜினி முதன்முதலில் பேசிய ஆவேச மேடை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுகு செவாலியே விருது வழங்கும் விழா மேடைதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாகக்கூட விமர்சனம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் ஜெயலலிதா முன், அவரை பார்த்து சொடக்கு போட்டு ரஜினி பேசியது ஜெயலலிதாவுக்கே ஒரு ஆச்சரிய அனுபவத்தை கொடுத்திருக்கும். அவர் பேசியது இதுதான்: நீங்க திறந்து வெச்சீங்களே... ஃபிலிம் சிட்டி... அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்’’ .
“அப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு’’ என ரஜினி பேசிய பேச்சை கூட்டம் ஆச்சர்யத்தோடு புருவத்தை உயர்த்தி பார்த்தது
ஜெயலலிதாவை நேருக்கு நேராக தவறு என்று சுட்டிக்காட்டி பேசிய ரஜினி, அதனை அடுத்து 1996ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பேசினார். இது ரஜினியின் அடுத்த அதிரடி அரசியல் பேச்சு: ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது' என்று சொல்லி அவர் வெளியிட்ட ஐந்து நிமிட வீடியோ அந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரசாரமாக பேசப்பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் பெரும் வெற்றிக்கும் அதுவே காரணமாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் 1996ஆம் ஆண்டு இந்த கூட்டணியை ஆதரித்தது குறித்து சமீபத்தில் ரசிகர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறிய ரஜினி, '20 ஆண்டுக்கு முன்னர் ஒரு கூட்டணியை நான் ஆதரித்தது விபத்து என்று வர்ணித்து, ஒரு நிர்ப்பந்ததின் பேரிலேயே அந்த அணிக்கு ஆதரவளித்ததாக கூறினார்.
1996க்கு பின்னர் ரஜினி எந்த கட்சியையும் தீவிரமாக ஆதரிக்கவில்லை. ஒரே ஒரு முறை அதிமுக-பாஜகவை ஆதரிப்பதாக கூறினார், பின்னர் தனது ரசிகர்களை உங்கள் விருப்பம் போல் வாக்களியுங்கள் என்று கூறினார். குறிப்பாக திமுகவை அவர் ஆதரிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். கலைஞர் என்னுடைய சிறந்த நண்பர் என்று ஜெயலலிதா முன்பே ஒரு மேடையில் கூறினாலும், கலைஞருக்கு அரசியல்ரீதியான ஆதரவை அவர் கடைசி வரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி அரசியலில் குதிக்க இத்தனை வருடங்கள் தயங்கியதற்கு ஒரே காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது ஜெயலலிதாவும் கருணாநிதியும் தான். இவர்கள் இருவரும் பல முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் மூன்றாவதாக ஒரு நபர் அரசியலில் தலையெடுப்பதை விரும்பவில்லை என்பதும், இந்த விஷயத்தில் இருவரும் மறைமுகமாக கைகோர்த்து கொண்டிருந்தனர் என்றும் கூறுவதுண்டு. அதனால் தான் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், என பல நடிகர்கள் அரசியலில் தோல்வியையே கண்டனர். ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்திருந்தாலும் அவருக்கும் இதே நிலைமைதான் கிடைத்திருக்கும் என்றும் கூறுவதுண்டு.
ஆனால் தற்போது ரஜினி எதிர்பார்த்த தருணமும், ஆண்டவன் கட்டளையும் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இனியும் ரஜினி தயங்க மாட்டார் என்றும் வரும் பொதுத்தேர்தலுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் கண்டிப்பாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பை ரஜினி நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்