செளந்தர்யா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளும், 'கோச்சடையான்' பட இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
ரஜினி-லதா தம்பதியின் இரண்டாவது மகளான செளந்தர்யா அடிப்படையில் ஒரு கிராபிக்ஸ் டிசைனர். முதலில் ரஜினி நடித்த படையப்பா, பாபா, சிவாஜி உள்பட பல படங்களுக்கு டைட்டில் கிராபிக் டிசைன் செய்த செளந்தர்யா பின்னர் ரஜினி நடிப்பில் 'சுல்தான்' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு டிரைலரும் ரிலீஸ் ஆனது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் டிராம் ஆனது.
இந்நிலையில் பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தை இயக்கி முடித்தார். இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் பட இயக்குனர் மற்றும் ரஜினியை இயக்கிய முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை இந்த படத்தின் மூலம் பெற்றார்.
மேலும் சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தின் காரணகர்த்தாவும் இவர்தான். ரஜினியையும், ரஞ்சித்தையும் சந்திக்க வைத்து ஒரு சூப்பர் ஹிட் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் சமீபத்தில் இவர் விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்த செளந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும், இந்த பிறந்த நாளில் அவர் மீண்டும் தனது கணவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிறந்த நாளில் செளந்தர்யாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய நமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.