புன்னகை அரசி சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Wednesday,October 12 2016]
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றால் கே.ஆர்.விஜயாவிற்கு பின் நடிகை சினேகா தான் என்பது கோலிவுட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. இந்த இளைய புன்னகை அரசி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கடந்த 2000ஆம் ஆண்டு 'என்னவளே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சினேகா அதன் பின்னர் கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்த படங்கள் ஆகும். 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்த சினேகா பின்னர் அவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பை குறைத்து கொண்டாலும் தற்போது மீண்டும் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை கூறலாம். என்றுமே இளமையான புன்னகையை கொண்டுள்ள சினேகா, இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த விருப்பத்டை சினேகா நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.