சினிமா சாதனையாளர் சிவகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

மார்கண்டேயர், நடிகர், ஓவியர், சொற்பொழிவு சாதனையாளர், யோககலையில் மன்னன், அகரத்தின் விதைநெல் என்று புகழப்படும் நடிகர் சிவகுமார் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிலையில் சிவகுமார் குறித்த சில அரிய தகவல்களை பார்ப்போம்

*சிவகுமார் நடித்த முதல் படம் 'காக்கும் கரங்கள்'. கடந்த 1965ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி நட்சத்திர தம்பதிகள் நடித்திருந்த இந்த படத்தில் சிவகுமார், சுரேந்தர் என்ற கேரக்டரில் அறிமுகமானார். ஓவியராய் சென்னைக்கு வந்த சிவகுமாரை முதன்முதலில் திரையில் காட்டிய படம் இது.

*சிவகுமாரின் இரண்டாவது படம் சிவாஜிகணெசனின் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சிவாஜி, செளகார் ஜானகி, ஜெயலலிதா, மேஜர் சுந்தர் ராஜன், சிவகுமார், நாகேஷ், பண்டரிபாய் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருந்தனர்

*சினிமாவில் நடித்தபோதே நாடகத்திலும் நடித்தவர் சிவகுமார். 1966ஆம் ஆண்டு இவர் நடித்த நாடகம் சென்னை அண்ணாமலை மன்றத்தில் அரங்கேறியது. நாடகத்தின் பெயர் 'அடல்ட்ஸ் ஒன்லி. இந்த நாடகம் அறிஞர் அண்ணா முன்னிலையில் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது

*பெரிய ஓவியராக வரவேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த சிவகுமார், பின்னர் நடிகராகி திரையுலகில் பிசியான நடிகரானார். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத சிவகுமார், திரையுலகில் சம்பாதித்த பணத்தை பொறுப்புடன் சேமித்து வைத்து கடந்த 1970ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் வீடு வாங்கினார். அந்த வீட்டின் அப்போதைய மதிப்பு ரூ.40 ஆயிரம் என்பதும், இன்றும் அவர் அந்த வீட்டில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

*1974ஆம் ஆண்டு சிவகுமார்-லட்சுமி திருமணம் நடந்தது. அந்த காலத்திலேயே 5000 பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு பிரமாண்டமான பந்தல் அமைத்து, பத்திரிகையாளர்கள், சக நடிகர்கள் முன்னிலையில் இந்த திருமணம் சிறப்பாக நடந்தது

*1975ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சிவகுமார்-லட்சுமி தம்பதிக்கு பிறந்த மகன் தான் இன்று கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா

*சிவகுமாரின் 100வது படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை சிவகுமார் பெற்றார். இந்த படத்தின் 100வது நாள் விழா அன்றைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் நடந்தது. அன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையை முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார்

*சிவகுமார் நடித்த முக்கிய திரைப்படங்களில் ஒன்று 'சிந்து பைரவி'. கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படம். சுஹாசினிக்கு நிறந்த நடிகை, இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர், சித்ராவுக்கு சிறந்த பாடகி என மூன்று விருதுகளை குவித்த இந்த படத்திற்கு சிவகுமார், பாலசந்தருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும் என்று பலரது விமர்சனமாக இருந்தது

* 1988ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று கலைஞர் கருணாநிதி தனது வீட்டிற்கு வந்த நிகழ்வை சிவகுமார் அடிக்கடி பேட்டிகளில் கூறியிருந்தார். கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் சிவகுமார் வீட்டில் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து அவருடைய ஓவியங்களை பார்த்து ரசித்தனர்

*2001ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பின்னர் திரையில் நடிப்பதை சிவகுமார் நிறுத்தி கொண்டார். இருப்பினும் ஒருசில தொலைக்காட்சி தொடரில் அதன் பின்னரும் நடித்தார்

*பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை கடந்த 2010ஆம் ஆண்டு பேட்டி எடுத்தார். மிகச்சிறந்த பேட்டிகளில் ஒன்றாக இந்த பேட்டி அமைந்தது என்று பலரும் பாராட்டினர்

*சிவகுமாருடன் பல திரைப்படங்களில் நடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சிவகுமாரின் வீட்டிற்கு வந்து கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு வாழ்த்து கூறினார்.

*தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர், விஜயகுமார், சத்யராஜ், பிரபு, சரத்குமார், விஜய்,அஜித், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவகுமார், சூர்யா, ஜோதிகா மூவரும் இணைந்து நடித்த படம் 'உயிரிலே கலந்தது'

தமிழ் திரையுலகில் மார்க்கண்டேயன் என்ற பெயரை பெற்ற நடிகர் சிவகுமார் இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து இளையதலைமுறை நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்க இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்