பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ருதிஹாசன்..
- IndiaGlitz, [Saturday,January 28 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப ஸ்ருதிஹாசன், உலக நாயகன் கமல்ஹாசன் போலவே குழந்தை முதலே திரையுலகில் புகுந்தார். கடந்த 1992ஆம் ஆண்டு தனது 6வது வயதிலேயே கமல்ஹாசனின் 'தேவர் மகன்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து 'போற்றி பாடடி பெண்ணே' என்ற பாடலை பாடினார்.
பின்னர் கடந்த 2000ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் ஹேராம்' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்ததோடு அதிலும் ஒரு பாடலை பாடினார்.
பின்னர் நாயகியாக பாலிவுட்டில் கடந்த 2009ஆம் ஆண்டு 'லக்' என்றா படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிகையாக அறிமுகமான ஸ்ருதிக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் அவர் அதே வருடத்தில் 'உன்னை போல் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து சிறந்த அறிமுக இசையமைப்பாளர் என்ற எடிசன் விருதினை பெற்றார்.
பாலிவுட், டோலிவுட்டில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை தமிழுக்கு அழைத்து வந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய '7ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, கமல்ஹாசன் உள்பட அனைவரது பாராட்டினையும் பெற்றார்.
பின்னர் தனுஷுடன் '3', விஷாலுடன் 'பூஜை', விஜய்யுடன் 'புலி', அஜித்துடன் 'வேதாளம்' என முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்த ஸ்ருதி, தற்போது மீண்டும் சூர்யாவுடன் நடித்துள்ள 'சி3' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக தந்தை கமலுடன் இணைந்து 'சபாஷ் நாயுடு' படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார். இந்த படம் ஸ்ருதிஹாசனுக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய் எட்டடி பாயந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கேற்ப, உலக நாயகனையும் மிஞ்சும் அளவுக்கு திரையுலகில் ஸ்ருதிஹாசன் பல சாதனைகளை சாதிக்க இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.