நடிகை ரேவதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Friday,July 08 2016]
இயக்குனர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த நாயகிகளில் முக்கியமானவர்களில் ஒருவரான ரேவதி இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
முதல் படமான 'மண்வாசனை' படத்தில் முத்துப்பேச்சி என்ற கேரக்டரில் நடித்த ரேவதி, அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றார். தொடர்ந்து அவர் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், கன்னிராசி, உதயகீதம், குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மின்னினார்.
ரஜினியுடன் நடித்த 'கை கொடுக்கும் கை' வியாபார ரீதியில் வெற்றி பெறவில்லை எனினும் அந்த படத்தில் அவர் கண்பார்வையில்லாத பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். மேலும் கமல்ஹாசனுடன் ரேவதி நடித்த 'ஒரு கைதியின் டைரி', 'புன்னகை மன்னன்', 'தேவர் மகன்' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த 'மருமகள்' படமும் அவருடைய நடிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்,
இயக்குனர் பாண்டியராஜனின் முதல் படமான 'ஆண்பாவம்' படம் ரேவதிக்கு குறிப்பிடத்தக்க ஒரு படம். மணிரத்னம் இயக்கிய 'மெளன ராகம், அஞ்சலி, ஆகிய படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் மிகையில்லை. அஜித்துடன் 'ரெட்' மற்றும் விஜய்யுடன் 'தமிழன்' ஆகிய படங்களிலும் ரேவதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'அம்மா கணக்கு' ரேவதியின் ரீஎண்ட்ரி ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரேவதி தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள மொழி படங்களிலும் ஒருசில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள ரேவதி இரண்டு இந்தி, இரண்டு ஆங்கில படங்களையும் ஒரு மலையாள படத்தையும் இயக்கிவுள்ளார். இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்து கொள்வதுடன் மேலும் அவர் பல படங்களில் நடித்தும், இயக்கியும் மென்மேலும் புகழ்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.