இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Monday,April 03 2017]
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என நான்கு துறைகளிலும் வெற்றி பெற்று இந்திய சினிமாவின் முக்கிய கலைஞராக விளங்குபவர் பிரபுதேவா. வேகமாக நடனம் ஆடும் திறமை உள்ளவர் என்பதால் இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்பட்டு வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் அவர்களின் மகனான பிரபுதேவா, ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை நடன இயக்குனராக பணியாற்றிய பல படங்களில் நடனம் ஆடினார். அக்னி நட்சத்திரம், இதயம், சூரியன், ஜெண்டில்மேன், வால்டர் வெற்றிவேல் உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பிரபுதேவா, ரோஜா நடித்த 'இந்து' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனர்.
அதன்பின்னர் ஷங்கரின் 'காதலன்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததால் அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இந்த படத்தின் வெற்றியால் ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு உள்பட பல படங்களில் நடித்தார். மின்சார கனவு படத்தில் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக நடன இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடனம், நடிப்பை அடுத்து இயக்குனர் துறையிலும் கால்பதித்த பிரபுதேவா, விஜய் நடித்த 'போக்கிரி, 'வில்லு' ஜெயம் ரவி நடித்த 'எங்கேயும் காதல்', உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். பின்னர் பாலிவுட் சென்று அங்கு 'ரவுடி ரத்தோர், 'ராமையா வஸ்தாவையா', 'ஆர்.ராஜ்குமார்' மற்றும் ஆக்சன் ஜாக்சன் ' ஆகிய படங்களை இயக்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் கோலிவுட் திரும்பியுள்ள பிரபுதேவா சமீபத்தில் நடித்த 'தேவி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி ஜெயம்ரவி நடித்த 'போகன்' படத்தை தயாரித்த பிரபுதேவா தற்போது 'சில சமயங்களில்', 'வினோதன்' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்
திரையுலகின் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று வரும் பிரபுதேவா அவர்களுக்கு மீண்டும் நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் இந்திய சினிமாவில் இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகின்றோம்.