லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை, கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் IndiaGlitz நயன்தாராவுக்கு தங்களது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை அனேகமாக நயன்தாரா ஒருவராகத்தான் இருப்பார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், தளபதி விஜய், தல அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே.
பெரிய நடிகர், சின்ன நடிகர், பெரிய நிறுவனம், சின்ன நிறுவனம் என்ற பாகுபாடு இன்றி கதை, தன்னுடைய கேரக்டருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை ஒப்புக்கொள்வதால் தான் தொடர் வெற்றியும், சுப்பர் ஸ்டார் அந்தஸ்தையும் நயன்தாரா பெற்றுள்ளார். மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும்போது கூட பிரபலம் ஆகாத நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும், அறிமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் ஒப்புக்கொண்டவர் என்ற பெருமையை பெற்றவர்.
தெலுங்கு திரையுலகிலும் நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, பிரபாஸ், ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர், போன்ற சீனியர் ஜூனியர் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் மலையாள திரையுலகிலும் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், திலீப், போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவற்றில் மாயா, டோரா, அறம், ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். மேலும் அவர் தற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள், கொலையுதிர்க்காலம் போன்ற படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடதக்கது.
பிரபல நடிகையாகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் அவர் தொழிலின் மீது வைத்துள்ள பக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். ஒரு படத்தை ஒப்புக்கொண்டு இயக்குனர் கூறியபடி நடிப்பது மட்டுமின்றி அந்த கேரக்டரில் முழு ஈடுபாடு கொண்டவர். இயக்குனரிடம் அந்த கேரக்டரை மேலும் மெருகேற்றுவது குறித்து ஆலோசனை செய்வார். அதனால் தான் அவருடைய ஒவ்வொரு கேரக்டரும் பேசப்படுகிறது. நயன்தாராவின் ஈடுபாடு குறித்து 'அறம்' இயக்குனர் கோபிநயினார் பேட்டி ஒன்றில் 'படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் நயன்தாரா மேடம், ஒரு உதவி இயக்குனர் போல வேலைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். கேரவேனுக்கு கூட போக மாட்டார். அதை முழுவதுமாக தவிர்த்துவிடுவார். தான் ஒரு பெரிய ஸ்டார் என்பதற்கான எந்த அலங்காரமும் இன்றி, எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பார்' என்று கூறியுள்ளார்
ஒருசில படங்களில் நாயகியாக நடித்தவுடனே பில்டப் செய்யும் நடிகைகளின் மத்தியில் நடிப்புத்திறமை, அனுபவம், பணிவு, முழு ஈடுபாடு, நேரந்தவறாமை, எளிமை ஆகிய அனைத்து பண்புகளையும் பெற்றுள்ள நயன்தாரா, இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து விருதுகளை குவிக்க வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments