எளிமையின் சிகரம் நம்ம நல்லக்கண்ணு. பிறந்த நாள் பகிர்வு
- IndiaGlitz, [Monday,December 26 2016]
அரசியல் என்றாலே சாக்கடை என்றும் அரசியல்வாதிகள் என்றாலே அயோக்கியர்கள் என்று இன்றைய இளைஞர்களின் கருத்தாக உள்ளது. இதனால்தான் இளைஞர்களும், நல்லவர்களும் அரசியலுக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஆனால் அரசியலில் நல்லவர்களும் எப்போதாவது அத்தி பூத்தாற் போல இருப்பார்கள் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குபவர் நம் நல்லக்கண்ணு அய்யா அவர்கள். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய ஒரு சிறிய பகிர்வு இது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று 3வது குழந்தையாகப் பிறந்த நல்லகண்ணு, தனது 18வது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
சிறு வயதிலேயே தலித்துகளுக்காக போராடிய நல்லக்கண்ணு, பல கிராமங்களில் விவசாய சங்கங்களை உருவாக்கினார். போராட்டம் நடத்தி சிறை செல்வதும், தலைமறைவு வாழ்வு வாழ்வதிலேயே அவரது பெரும்பாலான இளமைப்பருவம் கடந்தது.
சுதந்திர இந்தியாவுக்கும் குடியரசு இந்தியாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் நல்லகண்ணு பல சோதனைகளை அனுபவித்துள்ளார். 1948ஆம் ஆண்டு கம்யூனிச இயக்கம் தடை செய்யப்பட்ட போது நல்லகண்ணு உள்பட முக்கிய தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து, அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்போது மீசையில்லாமல் இருக்கும் நல்லகண்ணு ஒருகாலத்தில் கம்பீரமான மீசை வைத்திருப்பார். அவர் மீசையை எடுத்தது ஒரு கொடூரமான வரலாறு. 1949ஆம் ஆண்டு தோழர் ஒருவரின் வீட்டில் நல்லகண்ணு தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென போலீசார் அவரையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்தது. மற்ற தோழர்கள் எங்கே என்பது குறித்து போலீசார் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து 'தெரியாது' என்ற பதிலையே நல்லகண்ணு கூறி வந்தார். இதனால் பொறுமை இழந்த ஒரு போலீஸ் அதிகாரி சிகரெட்டை பற்ற வைத்து அதன் நெருப்பை நல்லகண்ணுவின் மீசையில் அழுத்தினார். நெருப்பு மீசையையும் தாண்டி சதையை பொசுக்க ஆரம்பித்தபோதும் நல்லகண்ணுவிடம் இருந்து எந்த பதிலையும் அந்த போலீஸ்காரரால் வாங்க முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் நல்லகண்ணு மீசை வைப்பதில்லை
அரசியல்வாதிகளில் அதிகம் கோபப்படாதவர் நம் நல்லகண்ணு. கோபமாக பேசி பிறர் மனதை துன்புறுத்த கூடாது என்பதில் உறுதியானவர் நல்லகண்ணு. மேலும் பார்வைக்கு படிக்காதவர் மாதிரி தோற்றம் இருந்தாலும் இலக்கியத்தில் புலமை பெற்றவர் நல்லகண்ணு. இலக்கியத்தின் மீது இவருக்கு அலாதி காதல் உண்டு. சங்க இலக்கியத்தில் இருந்து சமீபத்திய இலக்கியம் வரையும் அவருக்கு அத்துப்படி. பேச்சாற்றல், ஆங்கிலத்தில் புலமை, படைப்புத்திறன் ஆகியவை அரசியலையும் தாண்டி இவருக்கு உள்ள திறமைகள் ஆகும்.
அரசியலுக்கு வந்து சம்பாதிக்காதவர்களில் இவர் ஒரு வாழும் காமராஜர், கக்கன் என்று சொல்லலாம். இவருக்கு இன்னும் சொந்தவீடு கூட கிடையாது. இவரது மகளின் வீட்டில்தான் இவர் வசித்து வருகிறார். பணத்திற்கு சிறிதும் ஆசைப்படாத ஆச்சரியமான அரசியல்வாதி. தனது 80வது பிறந்த நாளில் இவருக்கு ஒருகோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது. ஆனால் அதை அப்படியே கட்சி நிதிக்கு கொடுத்த நல்ல மனதுக்கு சொந்தக்காரர் நம் நல்லகண்ணு.
நல்ல திரைப்படங்கள் சிலவும் நல்லகண்ணுவை கவர்ந்திருக்கின்றன. அன்பே சிவம், அங்காடி தெரு, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்களை நல்லகண்ணு பாராட்டியுள்ளார். இவருக்கு பிடித்த சினிமா கலைஞர்கள் பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர்கள் ஆவார்.
நல்லகண்ணு ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. 'டாக்டர் அம்பேத்கார், 'ஒளிவீசும் சுடர்', வெண்மணி தியாகிகள் கவிதை, 'டாக்டர் அம்பேத்காரின் தொலைநோக்கு பார்வை, 'மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)', 'தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்', 'பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்', 'விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)', 'தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு', போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் 'அம்பேத்கர்' விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் 'காந்திய விருது', முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ஜீவா விருது' போன்ற விருதுகளையும் பெற்றவர்.
அரசியலில் தூய்மையானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தோழர் நல்லகண்ணு இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து அரசியல் சேவை செய்ய வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் நம்முடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.