மறக்கமுடியாத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு
Send us your feedback to audioarticles@vaarta.com
மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த இரட்டையர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த 2வது படமான 'பணம்' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த இரட்டையர்கள் 13 வருடங்களில் சுமார் 100 படங்களுக்கும் மேல் இசையமைத்தனர். பின்னர் விஸ்வநாதனிடம் இருந்து ராமமூர்த்தி பிரிந்த பின்னர் தமிழ்த்திரையுலகின் இசைத்தளபதி ஆனார் விஸ்வநாதன்.
எம்.எஸ்.வி அவர்களின் பலமே மின்னல் வேகத்தில் மெட்டமைக்கும் அவரது திறமைதான். எவ்வளவு கஷ்டமான காட்சிகள் கொடுத்தாலும் டியூன் மழைகளை பொழிந்து இவற்றில் ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள் என்று இயக்குனர்களை திணறடித்துவிடுவார். எம்.ஜி.ஆர் நடித்த நேற்று இன்று நாளை` படத்துக்காக எழுதப்பட்ட 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...` என்ற பாடலுக்கு அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு படக்குழுவினர்களை திணறடித்தாராம்.
சிவாஜி நடித்த 'பாவமன்னிப்பு' என்ற திரைப்படத்திற்க்காக பாடகர்கள், இசைக்கலிஞர்கள், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர்களை தயார் நிலையில் வைத்து கொண்டு "அத்தான் என்னத்தான் ! அவர் உன்னைத்தான் ! எப்படி சொல்வேனடி' என்ற பாடலை வெறும் 13 நிமிடங்களில் மெட்டமைத்து ரிகார்டிங்கும் செய்து முடித்தார். இந்த உலக சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இசையுலக மேதாவியான எம்.எஸ்.வியையும் திணறடித்த ஒரு பாடலும் உண்டு. கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இடம்பெற்ற 'கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை' என்ற பாடலுக்கு அவர் 13 நாட்கள் எடுத்து கொண்டதாக கூறுவதுண்டு.
ஒரே ஒரு பாடலுக்கு அதிக இசைக்கருவிகளை பயன்படுத்தியும், குறைவான இசைக்கருவிகளை பயன்படுத்தியும் இசையமைத்தவர் எம்.எஸ்.வி ஒருவரே. சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை' என்ற படத்தில் இடம்பெற்ற 'எங்கே நிம்மதி' என்ற பாடலுக்காக 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தி சாதனை படைத்த எம்.எஸ்.வி, 'பாகப்பிரிவினை என்ற படத்தில் இடம்பெற்ற 'தாழையாம் பூ முடித்து' என்ற பாடலுக்கு மூன்று இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையுலகில் சாதனை செய்து வந்தாலும் அவரது சிறுவயது கனவு நடிகன் ஆக வேண்டும் என்பதுதான். எனவே இசையமைப்புக்கு இடையே அவ்வப்போது தனது நடிப்பு ஆசையையும் நிறைவேற்றி கொண்டார். கமல்ஹாசன் நடித்த 'காதலா காதலா', அஜித் நடித்த 'காதல் மன்னன் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதராகவும் விளங்கினார். அடுத்த வாய்ப்பை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது கனவில் கூட இருந்ததில்லை. தேவர் பிலிம்ஸ் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்து கொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன் என்பது தெரிந்ததே. ஒருமுறை சின்னப்பாதேவர் எம்.எஸ்.வி வீட்டிற்கு வந்து தனது அடுத்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, 'கே.வி.மகாதேவன் இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது' என்று மறுத்துவிட்டார்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கவிஞர் கண்ணதாசனும் இணைந்து காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். இருவருமே பிள்ளையுள்ளங்கொண்ட வெகுளிகள் என்பது மட்டுமின்றி இருவரின் பிறந்த தினமும் ஒன்று என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு சிறந்த தேசபக்தர். இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடி ராணுவ வீரர்களை மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களின் படங்களுக்கு அதிகம் இசையமைத்துள்ளார். அதேபோல் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து 'மெல்ல திறந்தது கதவு, 'செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்லிசை மன்னர்` வீற்றிருந்த நாற்காலி இன்னும் காலியாகத்தான் இருக்கிறது. இனிமேலும் அது அப்படியேதான் இருக்கும். அந்த அளவுக்கு, தன் மெட்டுக்களால் முத்திரை பதித்து என்றும் நம் மனதில் வாழும் எம்.எஸ்.வி அவர்கள் குறித்து அவரது நினைவுகளை அவரது பிறந்த நாளில் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com