'தல' தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Friday,July 07 2017]
திரையுலகின் 'தல' அஜித் என்றால் கிரிக்கெட் உலகின் 'தல' தோனி தான். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவருமான மகேந்திர சிங் தோனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 1981ஆம் ஆண்டு பிறந்த தோனி சிறுவயதில் கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாட்டுக்களில் தான் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் இவரது பயிற்சியாளர் இவரை விக்கெட் கீப்பராக களமிறக்கினார்.
மஹி என நண்பர்களால் அழைக்கப்படும் தோனி 1998ஆம் ஆண்டு பீகார் கிரிக்கெட் அணியிலும் 2004ஆம் ஆண்டு இந்திய ஏ அணியிலும் விளையாடினார். அதே ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். அடித்து ஆடும் பேட்ஸ்மேன், திறமையான விக்கெட் கீப்பர் ஆகியவை அவருக்கு முதலில் துணை கேப்டன் பதவியையும் பின்னர் கேப்டன் பதவியையும் பெற்று தந்தது
2005ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தோனி 145 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் அடித்தார். இதில் பத்து சிக்ஸர்களும் அடங்கும். அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அன்றைய தினம் தோனிக்கு கிடைத்தது.
ஒரே இன்னிங்ஸில் ஸ்டெம்பிங் மற்றும் கேட்ச் மூலம் 6 பேரை அவுட்டாக்கிய பெருமை, அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர், 250-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஸ்டம்ப் அவுட்கள் சாதனை, 6 முறை தொடர் நாயகன் விருது, 20-க்கும் மேல் ஆட்டநாயகன் விருது, 324 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன், என இவரது சாதனைப் பட்டியல் மிக நீளமானது.
தோனி தலைமையில் இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளது. முதன் முதலாக கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தலைமை தாங்கிய தோனி, கபில்தேவுக்கு பின்னர் உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் தோனி ஆட்டமிழக்காமல் அடித்த 91 ரன்கள் இந்தியா கோப்பையை வெல்ல ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 2009-ல் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் பெற்ற இவரது வாழ்க்கை வரலாறு, எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வசூலை பெற்றது.
ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார்.
இன்று 37-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மகேந்திர சிங் தோனி அவர்கள் சச்சினுக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக மதிக்கப்பட்டு வருகிறார். அவர் இன்னும் பல சாதனைகள் புரிய இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.