இயக்குனர் லிங்குசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களுக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கு முன் அறிமுகமாகி இன்று மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் லிங்குசாமி.
ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ் மற்றும் விக்ரமன் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு 'ஆனந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார் லிங்குசாமி. நான்கு சகோதரர்கள் இடையேயான பாசம், அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுப்பது, ஆகியவற்றை உணர்ச்சிமயமாக வெளிப்படுத்திய படம் ஆனந்தம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் குடும்ப செண்டிமெண்ட் படத்தில் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி, 'ரன்' என்ற தனது இரண்டாவது படத்தில் முற்றிலும் வேறுபட்டு முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் படமாக இயக்கினார். இந்த படத்தில் இடம்பெற்ற ஷட்டர் மூடும் காட்சி இன்றும் பேசப்பட்டு வருகிறது. மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, மூன்றாவதாக அஜீத்தை வைத்து இயக்கிய 'ஜி' திரைப்படம் அவருக்கு ஒரு தோல்விப்படமாக அமைந்தது. ஆனாலும் தனது அடுத்த படமான 'சண்டக்கோழி' படத்தை விறுவிறுப்பான ஆக்சன் படமாக கொடுத்து மீண்டும் வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் இணைந்தார். விஷால், மீரா ஜாஸ்மீன் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் சீயான் விக்ரமுடன் கைகோர்த்து மீண்டும் ஆக்சன் களத்தில் இறங்கி 'பீமா' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலையே பெற்றது.
லிங்குசாமி இயக்கிய மற்றொரு படம் 'பையா'. கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரோட் த்ரில்லர் படமாக அமைந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்றது.
இதன் பின்னர் மாதவன், ஆர்யா நடித்த 'வேட்டை' என்ற படத்தை லிங்குசாமி இயக்கினார். இந்த படத்தின் கதை ஏற்கனவே பல படங்களில் பார்த்தது என்பதால் சுமாராகவே ஓடியது.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யாவுடன் இணைந்து லிங்குசாமி இயக்கிய படம் அஞ்சான். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராகவே ஓடியது. தற்போது லிங்குசாமி 'பையா' படத்தை இந்தியில் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் துப்பாக்கி, அஞ்சான் படத்தில் நடித்து வித்யூஜாம்வால் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமி இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கினார். எழில் இயக்கிய தீபாவளி', பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9, பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி', கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்' ஆகிய படங்கள் இவர் தயாரித்த ஒருசில படங்கள் ஆகும்.
தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ஒருசில ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியிருந்தாலும் விரைவில் ரிலீஸ்செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமி தனது இயக்குனர் துறையிலும், தயாரிப்பு துறையிலும் வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்துள்ளார். இருப்பினும் கோலிவுட்டின் தரமான இயக்குனர் என்ற பெயரை தற்போது வரை தக்க வைத்து கொண்டிருக்கும் லிங்குசாமி, இனிவரும் காலங்களில் அதிக வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. மீண்டும் ஒருமுறை இந்த பிறந்த நாள் அவருக்கு இனிய பிறந்த நாளாக இருக்க வாழ்த்துகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com