சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

  • IndiaGlitz, [Monday,November 07 2016]

உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்ப உலக தரத்தில் தனது ரசிகர்களுக்கு திரைப்படங்களை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடுத்து வரும் கலையுலக தீர்க்கதரிசி கமல்ஹாசன் அவர்களுக்கு முதலில் நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ஒரு நடிகர் தனது வாழ்க்கையை முழுக்க முழுக்க சினிமாவுக்கே அர்ப்பணித்தவர் என்றால் கமல்ஹாசனை தவிர வேறு யாரெனும் உண்டா? என்று கூறினால் யோசிக்கத்தான் தோன்றுகிறது. சினிமாவுக்கு வந்து சம்பாதித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பின் அந்த பணத்தை வேறு தொழிலில் அல்லது அரசியலுக்கு செல்லும் காலகட்டத்தில் கமல்ஹாசன் அவர்கள் சிறுவயது முதல் இப்போது வரை தனது சம்பாதியத்தை முழுக்க முழுக்க சினிமாவிலேயே முதலீடு செய்வது சினிமாவுக்கே அவர் தன்னை அர்ப்பணித்து கொண்டதையே நிரூபணம் செய்கிறது. 'விஸ்வரூபம்' பிரச்சனையின்போது தனது வீடு முதல் தனது முழு சொத்துக்களையும் இழக்க அவர் முன்வந்ததே இதற்கு சரியான உதாரணம் ஆகும். அத்தகைய மாபெரும் கலைஞனை இந்த பிறந்த நாளில் வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.
'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்திற்காக ஏ.வி.மெய்யப்பசெட்டியார் கண்டெடுத்த முத்துதான் இந்த கமல்ஹாசன். உண்மையில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்க வேறொரு குழந்தையை அட்வான்ஸ் கொடுத்து படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துவிட்டனர். அந்த நேரத்தில் தற்செயலாக கமல்ஹாசனை பார்த்த அவர் அந்த குழந்தையை விட இந்தப் பையன் பிரஷ்ஷா, பிரைட்டா இருக்கான். இவனை இந்தப் படத்துல போட்டா பெட்டரா இருக்கும். இவன் பின்னாடி பெரிய ஆளா வருவான்' என்று கூறினாராம். அவரது கணிப்பு மிகச்சரியானது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
கமல் ஒரு தீர்க்கதரிசி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டுதான் சென்னை உள்பட இந்திய மக்களுக்கு சுனாமி என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் 2003ஆம் ஆண்டிலேயே சுனாமி குறித்து தனது அன்பே சிவம்' படத்தில் விளக்கியிருந்தார் கமல்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒருசில பைனான்ஸ் கம்பெனி நிறுவனங்களின் முறைகேடுகள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால் கமல்ஹாசன் கடந்த 1993ஆம் ஆண்டிலேயே 'மகாநதி' படத்தின் மூலம் இந்த முறைகேடு குறித்த விழிப்புணர்வை தனது படத்தில் தெளிவாக விளக்கியிருந்தார்.
தசாவதாரம் படத்தில் வரும் எபோலா வைரஸ், விக்ரம் படத்தில் வரும் தலிபான்கள், விஸ்வரூபம் படத்தில் வரும் பறவைகள் ஆயுதம் ஆகியவை கமல்ஹாசனின் பிற தீர்க்கதரிச தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படம் அதிக நாட்கள் ஓடி சாதனை செய்வதை விட அதிக திரையரங்குகளில் வெளியிட்டு வசூலை எடுத்துவிட வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியதே கமல்தான். அவர் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் முதன்முதலாக 610 பிரிண்ட் போடப்பட்டது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு அதிக பிரிண்ட் போட்டது இந்த படத்திற்காகத்தான். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடும் நாட்கள் முக்கியமில்லை வசூல் தான் முக்கியம் என்று கமல் கூறிய நடைமுறைதான் இப்போது அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

கமல்ஹாசனின் சதிலீலாவதி' படத்தில் கமலின் மகனாக நடித்த சிறுவனை 'என்ர பையன் இஞ்சினியராக வருவான்' என்ற வசனம் வரும். அந்த சிறுவன் தான் இன்று இந்திய அளவில் மிகச்சிறந்த சவுண்ட் இஞ்சினியர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகராக இருந்தபோதும் தன்னுடைய தயாரிப்பில் பிற நாயகர்களை நடிக்க வைத்து அழகு பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு. சத்யராஜ் நடித்த கடமை கண்னியம் கட்டுப்பாடு, நாசர் நடித்த மகளிர் மட்டும், மாதவன் நடித்த 'நள தமயந்தி' போன்ற படங்கள் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு சென்ற படங்களில் கமல்ஹாசன் நடித்த படங்கள் தான் அதிகம். இதுவரை கமல்ஹாசன் நடித்த ஏழு படங்கள் ஆஸ்காருக்கு சென்றுள்ளது. சாகர், சுவாதி முத்யம், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம் ஆகிய படங்கள் ஆஸ்காருக்கு சென்றுள்ளன. கண்டிப்பாக கமல் ஆஸ்காரை ஒருநாள் வெல்வார். அந்த நாளே இந்திய திரையுலகின் பொன்னாளாக கருதப்படும்
இந்தியாவில் மூன்று முறை தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் கமல்ஹாசன் தான். மூன்றாம் பிறை', 'நாயகன்', 'இந்தியன்' ஆகிய படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தன. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் குடும்பத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி ஆகிய மூன்று பேர் தேசிய விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை நட்சத்திரமாக நடித்த 'பார்த்தால் பசிதீரும்' முதல் 'ஆளவந்தான்' வரை கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் 21 படங்கள் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள்' படத்தில் மூன்று வேடங்களும், 'மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் நான்கு வேடங்களும், தசாவதாராம்' படத்தில் பத்து வேடங்களிலும் நடித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்ததுவே அதிக வேடங்களாக இருந்தது.
கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். மொழியே இல்லாமல் அதாவது வசனமே இல்லாமல் அவர் நடித்த படம் 'பேசும் படம்'
ஒரே ஆண்டில் அதிக படங்கள் ரிலீஸ் செய்தவர் என்ற சாதனை கமல்ஹாசனுக்குத்தான் சொந்தமானது. கடந்த 1977ஆம் ஆண்டு கமல் நடித்த 19 படங்கள் வெளியானது. இவற்றில் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெடி கேமிராவினால் முதலில் எடுக்கப்பட்ட படம் குணா. அதேபோல் DTSஐ கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய படம் 'குருதிப்புனல்' மேலும் முதன்முதலில் ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
தமிழகத்தில் முதன்முதலில் ரத்ததானம் செய்த முதல் நடிகர் கமல்தான். அவர் மட்டுமின்றி அவருடைய நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களையும் ரத்த தானம் செய்ய வைத்தார். அதேபோல் இந்தியாவில் கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆருடன் 'ஆனந்தஜோதி', சிவாஜியுடன் 'தேவர் மகன்' உள்பட ஒருசில படங்கள், ரஜினியின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' முதல் நினைத்தாலே இனிக்கும்' வரை பல படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
இந்திய நடிகர்களில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கமல்ஹாசன் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பல அரிய சாதனைகளை நிகழ்த்த இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

தனுஷின் 'கொடி' தமிழக வசூல் நிலவரம்

தனுஷ், த்ரிஷா, அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய 'கொடி' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது...

விஷாலின் 'கத்திச்சண்டை' சென்சார் தகவல்கள்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் மற்றும் காமெடி திரைப்படமான 'கத்திச்சண்டை' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ள...

30 வருடங்களுக்கு பின் இணையும் கமல்ஹாசன் - சாருஹாசன் சகோதரர்கள்

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு பின்னர் 30 வருடங்கள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன்...

தனுஷின் 'மாஸ்' அறிவிப்பு இதுவா? ஆச்சரியத்தில் கோலிவுட்

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கொடி' நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ள நிலையில் தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி...