வெற்றிப்பாதைக்கு வழித்தடம் அமைத்த தயாரிப்பாளர் தாணு

  • IndiaGlitz, [Monday,June 25 2018]

தமிழ் திரையுலகின் பிரமாண்டமான தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ்.தாணு. ஒரு படத்தை தயாரிப்பது மட்டுமின்றி அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் புரமோஷனில் முதல்முதலாக வித்தியாசத்தை காட்டியவர் என்றால் அது தாணு அவர்கள் தான் என்பது கலையுலகம் அறிந்ததே. அவ்வாறு தனது வித்தியாசமான விளம்ப யுக்தியின் மூலம் பல திரைப்படங்களை வெற்றிப்படமாக்கிய கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பள்ளி காலம் முதலே தனக்குள் கலைதாகம் இருந்ததாக கூறியுள்ள தாணு, சிறுவயதில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளார். அதன் பின்னர் சினிமா மீதான காதலால் இளம் வயதிலேயே தமிழ் திரைப்பட விநியோகஸ்தராக நுழைந்த தாணு முதல்முதலாக விஜயகாந்த் இரு  வேடங்களில் நடித்த நல்லவன் படத்தை தயாரித்துளார். மேலும் இந்த படத்தின், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூலில் சக்கைபோடு போட்டது 

முதலில் ஒரு வினியோகஸ்தராக தனது சினிமா பயணத்தை தொடங்கியதால் தாணு அவர்கள் வியாபார யுக்தியை முதலில் கற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவரை வினியோகஸ்தரிலிருந்து தயாரிப்பாளராக மாற்றியது. சினிமாத்துறை மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வமே இன்று அவரை மரியாதைக்குரிய ஒரு நிலையான இடத்தில் திரையுலகம் உட்கார  வைத்துள்ளது.

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தும் தாணு அவர்கள் தன்னுடைய படங்களின் பிரமாண்டத்தை விளம்பரத்திலும் காண்பிக்கும் முறையை கொண்டு வந்தார். நான்கு ஷீட்டில் 100 போஸ்டர்ஸ் செய்வதற்குப் பதில், அதனை எட்டு ஷீட்டாக்கி, 50 போஸ்டர்ஸ் செய்யும் முறையை இவர்தான் அறிமுகம் செய்தார். அதேபோல் ஹீரோக்களின் முகம் மட்டும் இருப்பது போன்ற 50 அடி கட்அவுட் வைத்ததும் இவருடைய விளம்பர யுக்திகளில் ஒன்று

இவர் தயாரித்த படங்களில் ஒன்று அர்ஜூன் நடித்த 'யார்' என்ற படம்' இந்த படம் 'ஏ' சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது. இதனால் இந்த படத்தின் விளம்பரத்தில், ஒரு குழந்தை அழுவதுபோல் போஸ்டர் ஒட்டி, இந்த படத்தை தன்னால் பார்க்க முடியவில்லையே என்று குழந்தை அழுவது போல சித்தரித்த போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது

அதேபோல் ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை பிராண்டிங்குடன் இணைத்து விளம்பரம் செய்யும் வித்தியாசமான வழக்கத்தையும் கொண்டு வந்தது தாணு அவர்கள் தான். இவர் தயாரித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்திற்கு ஒரு பிரபலமான அழகுப்பொருள் ஒன்றுடன் இணைத்து விளம்பரம் செய்தார். இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான உலக அழகி ஐஸ்வர்யா 'இந்த குறிப்பிட்ட அழகு பொருளை நான் தேர்வு செய்ததால்தான் என் மேனியின் ரகசியத்தை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று படத்தின் டைட்டிலை விளம்பரம் செய்தார். இதேபோல், நடிகர்களின் கதாபாத்திரங்ளுக்கு ஏற்ப பிராண்டிங் பொருட்களுடன் விளம்பரம் செய்வது இவரது இன்னொரு வெற்றிகரமான யுக்தி ஆகும். 

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு இவர் தயாரித்த 'ஆளவந்தான்' திரைப்படம் ரிலீஸானபோது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இன்று கமல் படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படம் விளங்கி வருகிறது. சூர்யா நடித்த 'காக்க காக்க', விஜய் நடித்த 'சச்சின்', 'துப்பாக்கி' 'தெறி', விக்ரம் நடித்த 'கந்தசாமி', விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி', ஆகியவை இவர் தயாரித்த வெற்றிப்படங்களில் சில

ரஜினிகாந்த் முதன்முதலில் ஹீரோவாக நடித்த 'பைரவி' படத்தின் விநியோகியஸ்தரான தாணு அவர்கள் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்து அந்த பட்டத்துடன் கூடிய போஸ்டர் அடித்தார். அந்த பட்டம் அவரை நிரந்தரமாக சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டது. இருப்பினும் ரஜினி படத்தை தயாரிக்க அவர் பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை தாணு  தயாரித்தார்.

'கபாலி' படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் புதுவித விளம்பரத்தை செய்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தார் தாணு. முதன்முறையாக 'ஏர் ஏசியா' இப்படத்தின் ஏர்லைன் பார்டனராக இணைந்தது. ஏர் ஏசியா 'கபாலி' படத்திற்காக, குறைந்தவிலை விமானங்களை சில வழித்தடங்களில் அறிமுகப்படுத்தினர். அதுமட்டுமின்றி, 'கபாலி' படம் பெயிண்ட் அடிக்கப்பட்ட விமானம் உலகமெங்கும் பறக்கவிடப்பட்டது. இது ஒரு பிரம்மாண்டமான விளம்பரம் யுக்தி என உலகமே பாராட்டியது.

புதியதாக தயாரிப்பு தொழிலில் ஈடுபட வரும் தயாரிப்பாளர்களுக்கு இவர் கூறும் அறிவுரை இதுதான்: வரும்முன் காத்தலே சிறந்தது என்பது போல், தயாரிப்பதற்கு முன் இந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கற்றறிந்து, களத்தில் இறங்குவது பாதுகாப்பானது. அதேபோல் பெரிய நடிகர்களின் படங்கள், அவர்களின் பெயருக்காகவே சிறப்பாக ஓடிவிடும். அதனால், புதுமுக படங்களின் கதை, வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதை தயாரிப்புக்கு முன் உறுதி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

தாணு அவர்களின் அனுபவம், விளம்பர யுக்தி மற்றும் சரியான நட்சத்திரங்கள், இயக்குனர்களை தேர்வு செய்யும் திறன் ஆகியவைகளை புதியதாக வரும் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொண்டால் தயாரிப்பாளர்கள் அனைவரும் வெற்றிநடை போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரையுலகம் வெற்றி பாதையில் செல்ல ஒரு நல்ல வழித்தடம் அமைத்து கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

ரஜினியின் மனதை மாற்றிய நல்லவர் யார்? கவுதம் மேனன்

கடந்த 2016ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் முதலில் இந்த படத்தை இயக்கவிருந்தவர் கவுதம் மேனன் தானாம்.

விஜய்யுடன் மீண்டும் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

மும்தாஜை கார்னர் செய்யும் வைஷ்ணவி?

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஓரளவுக்கு இறுதிப்போட்டிக்கு நெருங்குவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் இப்போதைக்கு மும்தாஜ் மட்டுமே

அரசியல் பின்னணியில் விஜய்-சூர்யா

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' மற்றும் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே திரைப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை

எவிக்சனில் இருந்து நித்யாவை காப்பாற்றிய பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பாதி நாள் வெங்காய சண்டையில் கழிந்ததால் பார்வையாளர்கள் பொறுமை இழந்தனர். இதனால் நித்யா மீது போட்டியாளர்கள்கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.