காந்தக்குரலார் ஜேசுதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைத்துறையில் 50 ஆண்டுகாலத்திற்க்கும் மேலாக சேவை செய்த பிரபல கர்நாடக, திரை இசைப்பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த இசை மேதைக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்த குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக்கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது. ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினர்களையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும். ஜேசுதாஸின் குரலில், மோகனராகமும், தோடி, கல்யாணி ராகங்களும் கேட்பது இந்த தலைமுறையினர் செய்த புண்ணியம் ஆகும்.
நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடலின் மூலம் தனது திரையிசை பயணத்தை தொடங்கிய கே.ஜே.ஜேசுதாஸ், இந்த ஐம்பது வருட காலத்தில் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத பாடல்கள்
தெய்வம் தந்த வீடு' என்ற பாடலுக்கு அந்த தெய்வமே இறங்கி வந்து ஆசிர்வதிக்கும்
விழியே கதை எழுது, மலரே குறிஞ்சி மலரே, சிந்து பைரவி படத்தில் உள்ள அனைத்து பாடல்கள், என இன்னும் அவர் பாடிய பாடல்களை சொல்லி கொண்டே போகலாம்.
ஒருவருக்கு எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகின்றதோ, எப்போதெல்லாம் தெளிவற்ற நிலை தோன்றுகின்றதோ, எப்போதெல்லாம் துன்பங்கள் மனதை வாட்டுகின்றதோ, எப்போதெல்லாம் மனம் பேதலித்துக்கொண்டிருக்கின்றதோ அப்போதெல்லாம் ஜேசுதாஸின் பாடல்களை கேட்டால் போதும். அனைத்து துன்பங்களும் பஞ்சாய் பறந்துவிடும்.
மூன்றாம் பிறை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் கடைசி பாடலான 'கண்ணே கலைமானே' பாடல் இந்த உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் அற்புதமான பாடல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்திற்காக ஜேசுதாஸ் பாடிய 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே! என்று பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. தாயின் பெருமையை பறைசாற்றக் கூடிய இந்தப் பாடலை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றைக்கும் பக்தர்கள் கேட்கலாம்.
கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை சாத்தப்படும் போது ஹரிவராசனம் என்று இவர் பாடிய பாடலைத்தான் இன்றைக்கும் ஒலிபரப்புகிறார்கள். இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டால் நடை சாத்தப்படுகிறது என்று பொருள்.
திரைப்பட பாடல்களாக இருந்தாலும், பக்தி பாடல்களாக இருந்தாலும் பாடல்களைப் பாடும் போது அர்ப்பணிப்பு உணர்வோடு பாடக் கூடியவர் ஜேசுதாஸ். கடின உழைப்பாளியும் கூட. 3 தலைமுறை பின்னணி பாடகிகளுடன் இவர் இணைந்து பாடியிருக்கிறார். குறிப்பாக, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. லீலா, வாணிஜெயராம், இன்றைய சித்ரா, சுஜாதா போன்ற அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடி பல மென்மையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்தான் ஜேசுதாஸ் என்றால் அது மிகையாகாது.
கே.ஜே.யேசுதாஸ், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசி, அரபி இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை செய்துள்ளார். ஏழு முறை தேசிய விருது பெற்றது மட்டுமின்றி கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரை இசை பாடகர் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இசைப்பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, சாகித்ய அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் அனைத்து மத பாடல்களையும் அவர் பாடியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு ஐயப்பன் சீசனிலும் நாடு முழுவதும் ஒலிப்பது இவர் பாடிய பாடல்கள்தான். கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ள ஜே.ஜே.ஜேசுதாஸ், சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை ஏ.வி.எம்.அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஜேசுதாஸ் குறித்து சொல்லிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இருக்காது. இருப்பினும் இந்த இனிய பிறந்தநாளில் அவரை குறித்து சில நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறோம். இசையுலக கடவுளுக்கு மீண்டும் எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து இசை சேவை செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments