42-ல் அடியெடுத்து வைக்கும் இளையதளபதியின் 42 குணாதிசயங்கள்
- IndiaGlitz, [Wednesday,June 22 2016]
இளையதளபதி விஜய்க்கு இன்று 42வது பிறந்தநாள். இந்த நன்னாளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நாமும் நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறோம். விஜய்யை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கில் விஷயங்கள் உள்ளன. இன்று அவருடைய 42வது பிறந்த நாளை முன்னிட்டு 42 முக்கிய விஜய்யின் அம்சங்களை பார்ப்போம்
1. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் 'காதலுக்கு மரியாதை' படத்தில் விஜய்யை எப்படி பார்த்தோமோ அதே போன்ற விஜய்யை தான் தற்போது பார்க்கின்றோம். அவருடைய இளமையின் ரகசியம் என்ன? என்பதே ஒரு பெரிய ரகசியம்தான். மணிக்கணக்கில் ஜிம்மில் தவமிருப்பது, கடுமையான டயட் மேற்கொள்வது போன்ற வழக்கம் அவரிடம் இல்லை. இருப்பினும் அவரது இளமைக்கு முக்கிய காரணம் அவருடைய நல்ல மனசுதான் என்பதே பலரது கருத்து. மனதில் நல்ல எண்ணம் உள்ளவர்களுக்கு முதுமையே கிடையாது என்பதற்கு விஜய் ஒரு நல்ல உதாரணம்.
2. விஜய்யின் நடிப்பை பிடிக்காதவர்களுக்கு கூட அவருடைய டான்ஸ் கண்டிப்பாக பிடிக்கும். பிரபுதேவா போன்று டான்ஸ் பரம்பரையில் வந்தவர் இல்லை, எந்த மாஸ்டரிடம் சென்று பயிற்சி எடுத்ததில்லை. ஆனால் எவ்வளவு கடினமான ஸ்டெப் ஆக இருந்தாலும் ஒருமுறை கவனித்துவிட்டால், ஒரே டேக்கில் ஆடிவிடுவார். விஜய் என்றால் டான்ஸ், டான்ஸ் என்றால் விஜய் என்பதுதான் கோலிவுட்டின் தாரக மந்திரம்
3. படப்பிடிப்பில் யாருடனும் அனாவசியமாக அரட்டை அடிக்க மாட்டார். தனது கேரக்டர் குறித்தும் அடுத்து நடிக்கவுள்ள காட்சி குறித்தும் சிந்தித்து கொண்டிருப்பார். ஆனால் சிறு கலைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பார். அக்கறையுடன் அவர்களை விசாரிப்பார். சக கலைஞர்களை மதிக்கும் குணம் உள்ளவர்.
4.தனது தந்தை மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து திறமையை வளர்த்து கொண்ட பிறகே சினிமாவுக்குள் நுழைந்தார்.
5. விஜய் ஒரு சிறந்த நடிகர், நடனம் ஆடுபவர் மட்டுமில்லை. விஜய் ஒரு சிறந்த பாடகரும்கூட. தான் நடிக்கும் படத்தில் ஒரே ஒரு பாடலையாவது பாடும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
6. பாலிவுட், ஹாலிவுட் என புகழ் பெற்றிருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் பிபாபாபாசு, இலியானா, போன்ற புகழ் பெற்ற நடிகைகள் விஜய்யுடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7. வீட்டில் இருக்கும்போது விஜய்யின் ஒரே பொழுதுபோக்கு வீடியோ கேம் ஆடுவது. மகனுடன் மணிக்கணக்கில் வீடியோ கேம் ஆடிக்கொண்டிருப்பாராம்.
8. எளிதில் உணர்ச்சிவசப் படாதவர் விஜய். ஆனால் அம்மா ஷோபாவுடன் நகை விளம்பரம் ஒன்றில் நடித்தபோது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டாராம். அந்த விளம்பரத்தில் அது துல்லியமாக தெரியும்
9.விஜய்யின் ரசிகர் மன்றங்கள் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஏன் இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் பலமாக உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களிடம் உரையாடுவது விஜய்க்கு பிடித்தமானவற்றில் ஒன்று.
10. தமிழ்ப்படங்களை தவிர வேறு மொழிகளில் நேரடியாக நடிப்பதை தவிர்த்து வருபவர். அவர் நடிக்கும் மொழிதான் தமிழே தவிர அவருக்கு எல்லா மொழி பேசுபவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.
11. விஜய் இரண்டு வேடங்களில் நடித்த படங்கள் இரண்டே இரண்டுதான். 'அழகிய தமிழ் மகன்' மற்றும் 'கத்தி'
12. சிவாஜி கணேசன், விஜயகாந்த், அஜித், சூர்யா, ஜீவா, ஸ்ரீகாந்த் போன்ற பல பிரபல ஹீரோக்களுடன் இணைந்து ஈகோ இல்லாமல் நடித்துள்ளார்.
13. அதிக இயக்குனர்களை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் விஜய்தான். விஜய் நடித்த படங்களில்தான் பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன், ரமணா, ஜான் மகேந்திரா, மாதேஷ், எஸ்.பி.ராஜ்குமார் உள்பட பல இயக்குனர்கள் கோலிவுட்டில் அறிமுகமானார்கள்
14. விஜய் எப்போதும் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்புவதில்லை. ஏழைகளுக்கும், ரசிகர்களுக்கும் உதவி செய்து அவர்களின் சிரிப்பில் திருப்தி அடைபவர்.
15.விஜய் தனது இரண்டு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். குழந்தைகளின் மழலை கால பேச்சுக்களை ஆடியோவில் பதிவு செய்தும், அவர்களுடைய ஒவ்வொரு பிறந்த நாள் விழாவையும் வீடியோவாக எடுத்தும் அந்த கலெக்ஷன்களை சேர்த்து வருகிறாராம்.
16.ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் பெரிதும் மதித்து வணங்கும் வேளாங்கன்னிக்கு சென்று வழிபடுவது விஜய்யின் வழக்கம்.
17. படப்பிடிப்பு முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் விஜய் தூங்குவாராம். சூப்பர் ஹிட் படம் முதல் அட்டர் பிளாப் படங்கள் வரை தவறாது பார்த்து அதில் உள்ள நல்ல விஷயங்களை மனதின் ஓரத்தில் போட்டுக்கொள்வார்.
18. விஜய் ஒரு அசைவ பிரியர். டிராமிசு என்ற இத்தாலி கேக் வகையை அவர் விரும்பிச் சாப்பிடுவார் என காமெடி நடிகர் சதீஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
19. பாலிவுட்டில் விஜய்க்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்தான். அவர் நடித்து வெளிவரும் அனைத்து இந்திப் படங்களையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார்.
20. வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் மனைவியின் சொந்த ஊரான லண்டன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய். லண்டனை அடுத்து எந்த நாட்டுக்கு செல்வது என்பதை முடிவு செய்வது அவருடைய குழந்தைகள்தான்.
21. வீட்டில் அவர் விரும்பி விளையாடுவது டென்னிஸ். அவருடைய ஒரே போட்டியாளர் அவரது மகன் சஞ்சய்தான்
22. நெருக்கமான கல்லூரி நண்பர்களை 'மச்சி' என்றும், மற்றவர்களை 'அண்ணா' என்றும் பெரியவர்களை 'வாங்க ராஜா' என்றும் அழைக்கும் வழக்கம் உடையவர் விஜய்.
23. சமையலிலும் விஜய்க்கு ஆர்வம் உண்டு. அவ்வப்போது வீட்டில் சின்ன சின்ன மெனுக்களை செய்து குடும்பத்தினர்களை அசத்துவார்
24. விஜய்க்கு கருப்பு நிறக்கார்கள்தான் பிடிக்கும். காரின் கம்பெனிகள் மாறுமே தவிர நிறம் மாறாது.
25. விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு நல்ல கர்நாடக இசை பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக அம்மாவின் கச்சேரிகளை விஜய் மிஸ் செய்ய மாட்டார்.
26. விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. நன்றாக நடிக்கும் நடிகைகளை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கவும் விஜய் தவறுவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் காஜல் அகர்வா, சமந்தா...
27. நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அப்பாவிடம் அனுமதி கேட்டபோது அவர் முதன்முதலில் பேசிக்காட்டியது 'அண்ணாமலை' படத்தின் வசனம்தான். அந்த வசனம் இப்போதும் விஜய்க்கு அத்துபடி.
28. விஜய். கோக், சன் ஃபீஸ்ட், போத்தீஸ் என, பல விளம்பரங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த விளம்பரம் அவருடைய அம்மாவுடன் நடித்த நகை விளம்பரம்தான்.
29. காதலுக்கு மரியாதை படத்துக்காகவும், திருப்பாச்சி படத்துக்காகவும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றவர். 5 முறை 'விஜய் டி.வி"-யின் விருதுகளையும் வென்றுள்ளார்
30. ரஜினிக்கு பிறகு ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ் நடிகர் விஜய்தான்.
31. பர்சனல் வாழ்க்கையில் விஜய்யின் காஸ்ட்யூமர் அவரது மனைவி சங்கீதாதான். விஜய்யின் பர்சனாலிட்டிக்கு அவரும் முக்கிய காரணம்.
32. தற்போது இருக்கும் புகழ், ரசிகர்களின் அன்பு ஆகியவற்றால் பொது இடங்களுக்குச் செல்லும்போது நிறைய இடையூறுகள் ஏற்படுவதால் முக்கிய விசேஷங்களை தவிர பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.
33.திடீரென்று கல்லூரி நண்பர்களின் நினைவு வந்தால் உடனே காரை எடுத்து கொண்டு நண்பர்களுடன் லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டு செல்வார் விஜய். இன்றைய மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் காட்சி கண்கொள்ளா காட்சி என்று அனைவரும் கூறுவதுண்டு.
34. விஜய்க்கு நகைகளின் மீது ஆசை கிடையாது. எளிமையான உடைகளையே விரும்புவார். பெரும்பாலும் அவருடைய உடையின் நிறம் வெள்ளையாகத்தான் இருக்கும்.
35. ஜாலியான மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' என்று அழைப்பார். மனைவியை அவர் 'வாங்க போங்க' என்று அழைத்தால் அவர் கோபமாக இருக்கின்றார் என்று அர்த்தம்.
36. * வெளிநாட்டு படப்பிடிப்பு செல்லும்போதும் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும்போது அப்பா-அம்மாவை சந்தித்துவிட்டு செல்லும் பழக்கம் உடையவர்.
37. ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கத்தில் மோதிரம் அல்லது செயின் கொடுப்பது அவருடைய வழக்கம்.
38. விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தை விமர்சனம் செய்த பிரபல வார இதழ், விஜய்யின் முகம் தேவாங்கு போல இருப்பதாக எழுதியிருந்தது. ஆனால் அதே வார இதழ்தான் பின்னாளில் அவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
39. பாரத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்தபோது ரஜினியை அடுத்து அவர் சந்தித்தது விஜய் ஒருவரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
40. விஜய் படங்கள் வெளிவராத தீபாவளி, பொங்கல் என்பது மிக மிக குறைவு. விசேஷ நாட்களில் தனது படங்களை வெளியிடுவதில் விஜய் பெரும் அக்கறை எடுத்து கொள்வார்.
41. சினிமாவின் பின்னணியில் இருந்து வந்த எத்தனையோ நடிகர்கள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இன்றும் விஜய் விளங்கி வருகிறார். இவருடைய படங்களின் ஓப்பனிங் வசூல் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
42. விஜய்யின் பெரும்பாலான ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பினாலும் விஜய்க்கு அந்த எண்ணம் இல்லை என்பதையே அவருடைய சமீபகால நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டியது காலம் ஒன்றுதான். எந்த மாற்றத்தையும் தரும் வல்லமை உடையது காலம்தான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.