காமெடியில் கம்பீரம் காட்டிய கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Wednesday,May 25 2016]
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜித்-விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி அவர்கள் இன்று தனது இனிய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர் நடித்த ராமன் தேடிய சீதை, உழைக்கும் கரங்கள் ஆகிய படங்களில் கவுண்டமணி சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தில்தான் அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் அவர் ரஜினியைப் பார்த்து சொல்லும் ”பத்த வெச்சுட்டயே பரட்ட” என்ற வசனம் 40 வருடங்களை கடந்தும் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலகட்டத்தில் செந்திலுடன் அவர் இணைந்து நடிக்க ஆரம்பித்தவுடன் இந்த ஜோடி இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் அதில் கவுண்டமணி-செந்தில் காமெடி இருக்க வேண்டும் என்று விநியோகிஸ்தர்கள் கண்டிஷன் போடும் அளவுக்கு இவர்களுடைய காமெடி தனித்திறன் பெற்றிருந்தது. ஹாலிவுட்டின் லாரல்-ஹார்டிக்கு இணையாக இந்த ஜோடி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.
கவுண்டமணியின் ஸ்பெஷலே அவருடைய லொள்ளுத்தனமான காமெடிதான். பெரிய ஹீரோக்களை கூட கலாய்க்கும் துணிவு இவருக்கு மட்டுமே இருந்தது. மேலும் அவரது கொங்கு தமிழ் மற்றும் எகத்தாளமான பேச்சு அவருடைய தனித்திறனாக அறியப்பட்டது.. கிட்டத்தட்ட அவர் ஏற்காத வேடங்களே இல்லை என்ற அளவுக்கு நகைச்சுவை, குணசித்திர, வில்லன் மற்றும் ஹீரோ கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.
கரகாட்டக்காரனின் வாழைப்பழ காமெடி, வைதேகி காத்திருந்தாள் படத்தின் ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டர், சூரியன் படத்தின் அரசியல்வாதி கேரக்டர், ஜெண்டில்மேன் படத்தின் கொள்ளைக்காரன் கேரக்டர், உள்பட கவுண்டமணி ஏற்று நடித்த கேரக்டர்கள் நூற்றுக்கணக்கில் கூறலாம்.
2000ஆம் ஆண்டிற்கு பின்னர் உடல்நிலை காரணமாக படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்ட கவுண்டமணி 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் ஐந்து வருடங்களில் ஒரு படம் கூட நடிக்கவில்லை. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு '49ஓ' என்ற சமூக விழிப்புணர்வு உள்ள படத்தில் ஹீரோவாக நடித்து மீண்டும் கம்பீரமாக ரீ எண்ட்ரி ஆனார் கவுண்டமணி.
தற்போது 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' உள்பட ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் கவுண்டமணி மீண்டும் பழைய கம்பீரத்துடன் கோலிவுட்டில் வலம் வர இந்த பிறந்த நாளில் அவரை நாம் மனதார வாழ்த்துவோம்.