பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களே!!!

  • IndiaGlitz, [Thursday,August 25 2016]

தமிழ் திரையுலக வரலாற்றில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பங்கு மகத்தானது. கம்பீரமான போலீஸ் கேரக்டர் என்றாலும் நாட்டுப்பற்றுள்ள கேரக்டர் என்றாலும் இப்போதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது விஜயகாந்த் நடித்த படங்கள்தான். இந்நிலையில் இன்று கேப்டன் விஜயகாந்த் தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு Indiaglitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த 1979ஆம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் புரட்சிகரமான கருத்துக்கள் அடங்கிய படங்களில் நடித்து வந்தார். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை,ஜாதிக்கொரு நீதி, போன்ற படங்களில் அவரது ஆக்ரோஷமான நடிப்பை காண முடியும்.
அதன்பின்னர் ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், அரசியல், பக்தி, போன்ற பலதரப்பட்ட படங்களில் நடித்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக விஜயகாந்த் படங்களும் தொடர் வெற்றியை பெற்று வந்தது.
விஜயகாந்த் நடித்த 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது. கோலிவுட் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் 100வது படத்தை வெற்றி படமாக கொடுத்தது விஜயகாந்த் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிவண்ணன் இயக்கத்தில் 'நூறாவது நாள்', ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'புலன் விசாரணை', ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய 'வைதேகி காத்திருந்தாள், தேவராஜ் இயக்கிய 'செந்தூரப்பூவே, சுபாஷ் இயக்கிய 'சத்ரியன், 'தியாகராஜன் இயக்கிய 'மாநகரக்காவல், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய 'சின்னக்கவுண்டர், லியாகத் அலிகான் இயக்கிய 'ஏழை ஜாதி', எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த 'செந்தூரப்பாண்டி, விக்ரமன் இயக்கிய 'வானத்தை போல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ரமணா', போன்ற பல படங்கள் விஜயகாந்தின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு சூப்பர் ஹிட் ஆகி வசூலையும் குவித்த படங்கள்
நடிப்பில் மட்டுமின்றி நிர்வாகத்திலும் விஜயகாந்த் சிறந்தவர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், நடிகர் சங்கத்தின் கடன்களை எல்லாம் அடைத்து மீதியிருப்பு இருக்கும் வகையில் நிர்வாகம் செய்தார். குறிப்பாக ரஜினி, கமல் உள்பட முன்னணி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் நட்சத்திர கலைவிழா நடத்தி அதன்மூலம் நடிகர் சங்கத்திற்கு பெரும் லாபம் கிடைக்க காரணமாக இருந்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் மட்டுமின்றி அரசியலில் விஜயகாந்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ஆம் ஆண்டு 'தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளை அவரது கட்சி கைப்பற்றியது. அந்த தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகம், அரசியல் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமான பயணம் செய்து வரும் விஜயகாந்த் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவதுடன் அவர் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகிறோம்.