பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே சென்னை பெண்கள் பிரபலமாகி வரும் நிலையில் அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு IndiaGlitz சார்பில் நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத் என்பவரும், அத்தை ஸ்ரீலட்சுமி என்பவரும் ஏற்கனவே திரையுலகில் ஜொலித்தவர்கள் என்பதால் அவர் திரையுலக பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதும் தொலைக்காட்சியில் இருந்து திரையுலகிற்கு வந்தவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அசத்தபோவது யாரு, மானாட மயிலாட ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் 'அவர்களும் இவர்களும்' என்ற படத்தில் அறிமுகமானாலும், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த படம் பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டக்கத்தி' படம் தான்

அட்டக்கத்தியை அடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் இளம் நடிகைகள் நடிக்க தயங்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் கேரக்டரில் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தார். இந்த படம் அவரை முன்னணி நடிகைகளின் பட்டியலுக்கு அழைத்து சென்றது. மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார். மேலும் மனிதன், தர்மதுரை, கட்டப்பாவை காணோம் ஆகிய படங்களும் ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம், தனுஷின் 'வடசென்னை, மணிரத்னம் இயக்கும் படம் உள்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இவ்வருடம் வெளியாகும் என்பதால் 2018ஆம் ஆண்டு அவருக்கு திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இனிய பிறந்த நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க மீண்டும் எங்களது  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்