நடிப்பு நாயகன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
- IndiaGlitz, [Saturday,January 16 2021]
தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் பிரபல நடிகர் ஆவது என்பது மிக அரிதாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் திரைப்படத் துறைக்கு சம்பந்தமே இல்லாத பின்னணியில் இருந்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
தமிழ் சினிமாவில் ஒருசில ஆண்டுகளாக சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்சேதுபதியின் முழு திறமையை வெளிப்படுத்தியவர் சீனு ராமசாமி என்று சொல்லலாம். ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தில் அவரை ஹீரோவாக தைரியமாக அறிமுகம் செய்தார். அந்த படம் தேசிய விருது பெற்றதால் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
அதன் பின்னர் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தில் மிக சிறப்பாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். இதனை அடுத்து ’சூதுகவ்வும்’ ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ’ஜிகர்தண்டா’ ’பண்ணையாரும் பத்மினியும்’ உள்பட பல வெற்றிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்
கடந்து 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் அவரை கமர்சியல் ஹீரோவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ’சேதுபதி’ ’தர்மதுரை’ ’ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் அவரை கொண்டு போய் சேர்த்த படம் ’விக்ரம் வேதா’ என்று சொல்லலாம். இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிக அபாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தன்னால் ரொமான்ஸ் வேடத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்த படம் ’96’ என்பதும் வித்தியாசமான வயதான வேடத்தில் ’சீதக்காதி’ படத்திலும் இதுவரை பெரிய நடிகர்கள் ஆக நடிக்க தயங்கும் திருநங்கை கேரக்டரில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்து அசத்தினார்.
ஹீரோவாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் குணசித்திர வேடம்ம் வில்லன் வேடத்திலும் நடித்து தனது கேரக்டரை அவர் கையாண்ட விதம், ஒவ்வொரு கேரக்டரிலும் தன்னுடைய பாணியை புகுத்தியதே அவரது வெற்றிக்கு காரணம்.
ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் படத்தில் வில்லனாக நடித்தாலும் தன்னால் புகழ் பெற முடியும் என ‘பேட்ட’ படத்தில் நிரூபித்த விஜய்சேதுபதி, பொங்கல் தினத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படத்த்லும் வில்லனாக நடித்து விஜய்க்கு இணையாக தன்னாலும் பேச வைக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ அனேகமாக விஜய் சேதுபதி ஒருவராகத்தான் இருப்பார். இதே போல அவர் தனது திரையுலக பயணத்தில் வெற்றி மேல் வெற்றி பெற இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.