இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிறந்த நாள் சிறப்பு பதிவு
- IndiaGlitz, [Friday,January 06 2017]
ஆஸ்கார் பரிசு என்பது இந்திய திரையுலகினர்களுக்கு எட்டாக்கனியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் ஒரே ஆண்டில் ஒன்றில்லை இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று 100 கோடி இந்தியர்கள் மனதிலும் ஒரே நிமிடத்தில் இடம் பெற்றவர் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் மயங்காத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது. திரையுலக இசையில் சரித்திர சாதனை படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்து கூறுவதில் பெருமை அடைகிறோம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இனிய பிறந்த நாளில் அவரை பற்றிய ஒருசில நினைவுகளை பகிர்வோம்
ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசமாட்டார். ஆனால் அவ்ரது இசை அவரை விட பல மடங்கு பேசும்
பொது நிகழ்ச்சியின்போது எத்தனை பேர் ஆட்டோகிராப் கேட்டாலும் சலிக்காமல், எவ்வளவு நேரமானாலும் ஆட்டோகிராப் போட்டு கொடுப்பார். ஆனால் மசூதியில் யார் கேட்டாலும் ஆட்டோகிராப் போடமாட்டாராம். மசூதியில் ஆண்டவன் மட்டுமே பெரியவர் என்று கூறி அமைதியாக சென்றுவிடுவாராம்
நடிப்பதில் ரஹ்மானுக்கு சிறிதும் ஆர்வம் இல்லை. காரணம் அவரது கூச்ச சுபாவம்தான். ஜெய்ஹோ பாடலுக்கு ரஹ்மானை நடிக்க வைக்க பரத்பாலா பெரும்பாடு பட்டாராம்.
ரஹ்மான் ஒரு கார் பிரியர். வேகமாக கார் ஓட்டுவதில் வல்லவராம். அவருடன் காரில் செல்பவர்கள் அவரது வேகத்தை பார்த்து பயப்படுவார்களாம். ஆனால் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் சாலை விதிகளை மதிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் அவருக்கு ரஹ்மான் அதிக மரியாதை கொடுப்பாராம்.
ரஹ்மான் திறமையாக மிமிக்ரி செய்பவர் என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாக கவியரசு வைரமுத்து குரலை மிகவும் அற்புதமாக மிமிக்ரி செய்வாராம்
இவருக்கும் இவரது மகன் அமீனுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று ரஹ்மானின் மகன் அமீனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூறிவிடுங்கள்
பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி படப் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்பாராம் ரஹ்மான். சில சமயம் அவரே அப்பாடல்களை வாய்விட்டுப் பாடுவாராம். ஆனால் அந்த பாடல்களை அவரது குடும்பத்தினர் மட்டுமே கேட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ரஹ்மான் தனது ஒலிப்பதிவு கூடத்துக்குள் அனுமதிக்க மாட்டாராம்
ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது. இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.
தினமும் ஐந்து முறை தொழுகையை எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவற விடமாட்டார். இவருக்கு மிகவும் பிடித்த மசூதி நாகூர் மசூதி
கனடாவில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு
ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தால் கூட அது நல்ல இசைதான் என்று தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி கூறுவாராம்.
சக இசையமைப்பாளர்களை பார்த்தால் உடனே அவர்களது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல் பாராட்டும் பழக்கம் உடையவர் ரஹ்மான்
பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால் லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றவர் நமது ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது
தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை 'ரோஜா' படத்தின் மூலம் மணிரத்னம் திரையுலகிற்கு அழைத்து வந்தார். அந்த படத்திற்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் ரூ.25 ஆயிரம்
ரோஜா படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலை முதன்முதலில் தனது அம்மாவுக்குத்தான் போட்டு காட்டினாராம் ரஹ்மான். அப்போது 'ரொம்ப நல்லா இருக்கு, என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை. எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா' என்று கண்ணீருடன் சொன்னாராம் அவரது அம்மா.
ரஹ்மானின் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் ஒரு பிரபல பாடகருக்கு வெறி பிடித்த ரசிகராம். அவர்தான் பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் நுஷ்ரத் ஃபதே அலிகான். ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தில் இவர்தான் பாடியுள்ளார்.
எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் மது அருந்திவிட்டு தன்னுடைய ஸ்டுடியோவுக்கு வருபவர்களை அவர் அனுமதில்லையாம்
ரஹ்மானின் அபார திறமை குறித்து கமல் கூறியது: 'இந்தியன்', 'தெனாலி' படங்களில் ரஹ்மானோடு இணைந்து பணிபுரிந்தபோது, பத்து நிமிடங்கள் பேசி முடிவதற்குள்ளேய கதையை, அதன் போக்கைக் கிரகித்துக்கொண்டார். போதும் என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினார். 'இவ்வளவு சீக்கிரம் கதையைப் புரிந்துகொண்டார? என்று ஆச்சர்யப்பட்டேன். நான் சொல்ல வந்த விஷயத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பியது போல உணர்ந்தேன். ஆனால், ஒலிப்பதிவு முடிந்ததும் பாடல்களைக் கேட்டால், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகத் தரத்தில் இருந்தது. தான் புத்திசாலி என்பதை எதிராளியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதது ரஹ்மான் ஸ்பெஷல்!'' என்று கூறினார்.
ரஹ்மான் இசையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து இசையுலகில் இன்னும் பல சாதனைகள் புரிய இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்களது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்