அனுமன் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு.. நடிப்பு என மக்கள் நினைத்ததால் அதிர்ச்சி..!
- IndiaGlitz, [Tuesday,January 23 2024]
அயோத்தியில் நேற்று ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ராமர் குறித்த பாடல்கள் நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் அனுமன் வேடத்தில் நடித்து கொண்டிருந்தவர் மேடையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஹரியானா மாநிலம் பிவானியில் ராம்லீலா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனுமன் வேடத்தில் நடித்து கொண்டிருந்த நடிகர் ஹரீஷ் மேத்தா என்பவர் ராமர் மற்றும் சீதையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போன்ற காட்சியில் நடித்தார். அப்போது அவர் ராமர் காலில் விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே சரிந்து விழுந்ததாக தெரிகிறது.
ஆனால் இதுவும் நாடகத்தின் ஒரு பகுதி என மக்களும் நாடக குழுவினரும் நினைத்து அவரை சிறிது நேரம் எழுப்பாமல் இருந்தனர். ஆனால் அவர் நீண்ட நேரம் எழுந்திருக்காமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த நாடக குழுவினர் உடனே அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஹரிஷ் என்பவர் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அனுமன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் என்றும் கூறப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவின் போது பல ஆண்டுகளாக அனுமன் இடத்தில் நடித்தவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.