1 நிமிஷத்திற்கு 5 லட்சம் கொடுங்க… மாப்பிள்ளை வீட்டில் ஹன்சிகாவின் தாயார் கண்டீஷன் போட்டாரா?
- IndiaGlitz, [Saturday,March 18 2023]
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வரும் ஹன்சிகா மோத்வானியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின்போது அவரின் தாயார் மோனா மோத்வானி மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம் கொடுங்க என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியானதால் தற்போது ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” படத்தின்மூலம் கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்த இவரின் 50 ஆவது திரைப்படமான “மஹா” சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவைக் காதலித்துவந்த இவர் கடந்த டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டு பழமையான முண்டோடா அரண்மனையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இவரின் திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணத்தை ஒட்டி நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள் மற்றும் ஏற்பாடுகளைக் குறித்த அனைத்து வீடியோக்களையும் தற்போது “லவ் ஷாதி டிராமா“ எனும் தனது வலையொளியில் ஹன்சிகா பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் திருமணத்தின்போது மாப்பிள்ளை சோஹேலின் வீட்டார் தாமதமாக வந்ததாகவும் இதனால் கடும் வருத்தம் அடைந்ததாகவும் ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி ஒரு வீடியோவில் கருத்துக் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு ஒரு பணிவான வேண்டுகோள் உள்ளது. கத்தூரியாக்கள் மிகவும் தாமதமாக வருபவர்கள் மற்றும் மோத்வானிகள் மிகவும் நேரத்தை கடைப்பிடிப்பவர்கள். இன்று தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அசுபமான நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இருப்பதால் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். எனவே நீங்கள் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன் என்று திருமணத்தின்போது நடிகை ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி மாப்பிள்ளை வீட்டாரிடம் கோரிக்கை வைத்தாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கதுரியா ஏற்கனவே ஹன்சிகாவின் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்துவருகிறார். அதோடு ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றையும் கடந்த 1986 முதல் நடத்திவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.