நாளை நடக்கவிருக்கும் நிலவின் கொண்டாட்டம்… புளூ மூன் நிகழ்வு!!!
- IndiaGlitz, [Friday,October 30 2020]
புளூ மூன் என்றால் உடனே நிலா புளூ நிறமாகத் தெரியுமா எனச் சிலர் கேட்பது உண்டு. ஆனால் நிலா எப்போதுமே புளூ கலராகத் தெரியாது என்பதுதான் நிதர்சனம். ஒரு மாதத்தில் ஒரு அமாவாசை, ஒரு பௌர்ணமி என நிலவில் இரண்டு நிகழ்வுகள் ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் ஒரே மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி தோன்றுவதைத்தான் புளூ மூன் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்த நாட்களில் நிலா புளூ நிறமாகத் தெரியாவிட்டாலும் அறிவியல் முறையில் ஒரே மாதத்தில் ஏற்படும் இரண்டாவது பௌர்ணமியை புளூ மூன் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு நாளை நடக்க இருக்கிறது. இதுகுறித்து மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அரவிந்த் பரஞ்சிபயே,
“அக்டோபர் 1 ஆம் தேதி பௌர்ணமி வந்தது. இரண்டாவது பௌர்ணமி அக்டோபர் 31 ஆம் தேதி இரவு 8.19 முதல் தோன்ற இருக்கிறது. நிலவு தன்னைத்தானே ஒரு முறை சுற்றுவதற்கு 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது. கூடுதல் நேரத்தைச் சேர்க்கும்போது ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை நீல நிலா நிகழ்வு ஏற்படுகிறது. பிப்ரவரியில் 28 அல்லது 29 நாட்கள் என்பதால் வாய்ப்பே இல்லை. அடுத்த நீல நிலா 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தான் ஏற்படும். அதேபோல இறுதியாக புளூ மூன் மார்ச் 31, 2018 ஆம் வருடம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வை பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தனர்.