வரி ஏய்ப்பு இருந்தால் சோதனை நடக்கத்தான் செய்யும்: விஜய் வீட்டில் ரெய்டு குறித்து எச்.ராஜா

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை செய்து வருவது தெரிந்ததே. அதனை அடுத்து விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நேற்று மாலை முதல் விடிய விடிய நடந்து வருகிறது. இந்த வருமான வரி சோதனையால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் வீட்டில் நடந்து வரும் சோதனை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லாமல் சோதனை செய்ய மாட்டார்கள். வருமான வரித் துறையை பொறுத்த வரையில் கணக்கில்லாத பணம் பிடிபட்டால் அதற்கான வரியும் வட்டியும் மட்டுமே கட்ட வேண்டும். வேறு எந்த நடவடிக்கையும் இருக்காது. விஜய் அரசியலில் இல்லை அதனால் வருமான வரி சோதனையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. வருமான வரி ஏய்ப்பு இருந்தால் இதுபோன்ற சோதனைகள் நடக்கத் தான் செய்யும் என்று கூறினார்

மேலும் நேற்றைய ரஜினியின் பேட்டி குறித்து கூறியபோது ’ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் குறித்து கூறியிருப்பது மிகச் சரியான புரிதலோடு சொல்லப்பட்ட கருத்து என்றும் இதிலிருந்து ரஜினி சாதாரண அரசியல்வாதி இல்லை என்றும் அவர் ஒரு தேசியவாதி என்பது நமக்கு புரிவதாகவும் கூறினார்