பரபரப்பை ஏற்படுத்திய பாலாவின் 'அந்த' ஒரே ஒரு வார்த்தை

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் எந்த சர்ச்சைக்கும் விளக்கம் அளிக்காமல் அவர் எப்போதும்போல் அமைதியாக இருப்பார். அந்த சர்ச்சைகள் குறித்து வாதம் செய்பவர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வார்கள். ஒவ்வொரு பாலா படத்தின்போதும் இதுதான் நடக்கும். அதைபோலவே நேற்று வெளியான பாலாவின் 'நாச்சியார்' படத்தின் டீசரிலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த டீசரின் இறுதியில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா ஒரு கெட்ட வார்த்தையை கூறுகின்றார். அந்த வார்த்தையை பாலா எப்படி பயன்படுத்தலாம், '36 வயதினிலே' படத்தில் 'வாடி ராசாத்தி' என்றும், 'மகளிர் மட்டும்' படத்தில் புரட்சி பெண்ணாகவும் நடித்த ஜோதிகா, 'அந்த' வார்த்தையை எப்படி சொல்லலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துமோதல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.


இதற்கெல்லாம் ஒரு படிமேலே போய் ஒருசில ஊடகங்கள் 'அந்த' வார்த்தைக்கு அர்த்தமும், அந்த வார்த்தை சங்க இலக்கியங்களில் இருந்து எப்படி மருவி வந்தது என்பது குறித்தும் விளக்கமளித்து வருகின்றன. ஆனால் இந்த விளக்கங்கள், விமர்சனங்கள் பாலாவை எந்த விதத்திலும் பாதிக்காது. பாலா ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை அவரே நினைத்தால் கூட மாற்ற மாட்டார்.

பாரதிராஜா படங்கள் உள்பட எத்தனையோ படங்களில் கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருவது சகஜமாகத்தான் தமிழ் சினிமாவில் உள்ளது. அவற்றில் இதுவும் ஒன்று எடுத்து கொண்டு சமாதானம் அடைய வேண்டியதுதான். வேறு வழியில்லை. இருப்பினும் பாலா இந்த வார்த்தையை எந்த காட்சிக்காக உபயோகித்துள்ளார். ஜோதிகா கேரக்டர் இந்த வார்த்தையை பயன்படுத்தும் அளவுக்கு எதிராளியின் கேரக்டர் என்ன? என்பதை அறிந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும். படம் வெளிவரும் வரை பொறுமை காப்போம்