ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்'. திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Thursday,May 12 2016]
'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜி.வி.பிரகாஷ் கடந்த மாதம் வெளியான 'தெறி' படத்துடன் 50 படங்களுக்கு இசையமைத்து இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்துள்ளார். இசையமைப்பது மட்டுமின்றி 'டார்லிங்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது நான்கைந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து பிசியான ஹீரோவாகவும் கோலிவுட் திரையுலகில் ஜி.வி.பிரகாஷ் வலம் வருகிறார்.
இசையமைப்பாளர், ஹீரோ என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்யும் ஜி.வி.பிரகாஷ் நடித்த முதல் படமாக ''டார்லிங்' வெளியானபோதிலும் அவர் உண்மையில் நடித்த முதல் படம் 'பென்சில்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒருசில காரணங்களால் சில மாதங்கள் முடங்கியிருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளையும் கடந்து நாளை முதல் வெளியாகிறது
திட்டமிட்டபடி இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தால் கூட இந்த அளவுக்கு வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். 'டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பின்னர் இந்த படம் வெளிவருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் ஜீவா, காக்கிச்சட்டை, ஈட்டி, போன்ற வெற்றி படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மணிநாகராஜ் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
பள்ளி மாணவர், மாணவியாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இந்த படம் ஒரு விறுவிறுப்பான த்ரில் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை குறித்து எந்தவித தகவல்களும் கசியவில்லை என்பதால் இந்த படம் குறித்து நாளைய திரைவிமர்சனத்தில் விரிவாக அலசுவோம்.