அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டனர்: ஜிவி பிரகாஷ்
- IndiaGlitz, [Tuesday,June 05 2018]
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடவடிக்கையால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதாவும், இந்த ஆண்டு விழுப்புரம் பிரதீபாவும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சில வருடங்களில் இருவரும் டாக்டராகி இருப்பார்கள். இந்த இருவரின் மரணத்திற்கு நீட் தேர்வு ஒன்றே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனிதா மரணத்தின்போது ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது பிரதீபா மரணத்திற்கும் சமூக வலைத்தளத்தில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும்... எனது தங்கைகள் அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர்... பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே' என்று கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும் இனியாவது நீட் தேர்வால் உயிர்ப்பலி ஏற்பட கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.