கமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த நிலைய்ல் மாநில அரசும் சென்னை மாநகராட்சியும் தீவிர முயற்சிகள் செய்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்

இந்த நிலையில் அரசு மட்டும் நினைத்தால் இந்த கொரோனா வைரஸை அழிக்க முடியாது என்றும் நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற வகையில் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ’நாமே தீர்வு’ என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சென்னை மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில் கமலஹாசனின் இந்த திட்டத்திற்கு நடிகரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’நாமே தீர்வு’. நம்மை காப்பாற்ற யாரோ ஒருத்தர் வருவார்கள் என்று எதிர்பார்க்காமல் நாமே தீர்வு என்ற இந்த ஐடியா எனக்கு ரொம்ப பிடித்தது. இந்த ஐடியாவுக்கான வெப்சைட்டை மக்களுக்காக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. இந்த வெப்சைட் மிகவும் எளிமையாக உள்ளது. உதவி செய்வதற்கு பணம், பொருள், மெடிக்கல் என பல ஆப்ஷன்கள் இதில் உள்ளது. அதில் நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து, யாருக்கு உதவி தேவை என்பதை பின்கோடு வைத்து அறிந்து தேவையான மக்களுக்கு உதவி செய்யலாம்
ஒருவர் நினைத்தாலோ அல்லது அரசு நினைத்தாலோ எல்லோரையும் காப்பாற்ற முடியாது. அந்த உதவி வருவதற்கு தாமதமும் ஆகலாம்.அதுவரை கஷ்டப்படும் மக்களுக்கு நம்மால் முடிந்த உடனே உதவியை நாம் செய்ய வேண்டும் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்

ஜிவி பிரகாஷின் இந்த ஆதரவிற்கு கமலஹாசன் நன்றி தெரிவித்து கூறியதாவது: நாமே தீர்வு இயக்கத்தின் அடுத்த கட்டம். உதவ நினைப்போரையும், உதவி வேண்டுவோரையும் இணைத்திடும் முயற்சி. இந்த இணையதளத்தை இன்று அறிமுகப்படுத்திய ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகள். இளைஞர்கள் இணைந்தால் தான் தீர்வுகள் விரைவாகும். இணைந்து மீட்போம் சென்னையை.