ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு
- IndiaGlitz, [Monday,December 11 2017]
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எந்தவொரு சமூக போராட்டத்திலும் முதல் ஆளாக கலந்து கொண்டு ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் நெடுவாசல் போராட்டம் வரை அவரது ஆதரவு இருந்து வரும் நிலையில் தற்போது ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடந்து வரும் மீனவர்களின் போராட்டத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
நேற்று ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் ஆரி ஆகியோர் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று அந்த பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுடைய போராட்டத்திற்கும் தங்களது முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியபோது, 'ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மீனவ சமுதாயம் கொடுத்த ஆதரவை யாராலும் மறக்க முடியாது. இந்த சமயத்தில் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்ற நிலையில் நாமும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பகுதியில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.