சமூக சேவைகளுக்காக ஜிவி பிரகாஷ் பெற்ற மதிப்பு மிகுந்த பட்டம்
- IndiaGlitz, [Friday,May 18 2018]
நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டு இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ். மேலும் நடிப்பு மட்டுமின்றி சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர் ஜிவி பிரகாஷ் என்பது தெரிந்ததே
ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டம், காவிரி பிரச்சனை உள்பட பல சமூக பிரச்சனைகளுக்கு தனது சமூக வலைத்தளத்திலும் நேரிலும் சென்று குரல் கொடுத்தவர். கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியவர் என்பது தெரிந்ததே. மேலும் ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை அமைக்க கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் ஆளாக நிதியுதவி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் சமூக சேவையை பாராட்டி St.Andrews Theological University International என்ற பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜிவி பிரகாஷின் மனைவியும் பாடகியுமான சைந்தவி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஜிவி பிரகாஷ் சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கு பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டோம் என்று கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.