நெடுவாசல் காப்போம். ஜி.வி.பிரகாஷின் விழிப்புணர்வு முயற்சி

  • IndiaGlitz, [Sunday,February 19 2017]

தமிழகத்தை நோக்கி பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளை நமது அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகள் யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுமக்களும் இதை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு அமைக்கும் பிரச்சனையைவிட, காவிரி நீர் போன்ற பிரச்சனையைவிட உடனடியாக முக்கிய கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச்சனைகளாக சீமைக்கருவேல மரங்கள், மீத்தேன் வாயு போன்ற பிரச்சனைகள் உள்ளது என்பதை பொதுமக்களும் பதவியில் உள்ளவர்கள் மறந்துவிட்டனர்.

குறிப்பாக மீத்தேன் வாயு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் தார் பாலைவனம் போல் மாறிவிடும். எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்காக இந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் மித்தேன் பயன்படும் என்றும் இதனால் 6.5 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த பகுதி நிலங்களின் கதி என்ன ஆவது? விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆகும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். எனவே மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற ஒரு போராட்டத்தின் மூலம் இந்த சதியை முறியடிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் முயற்சித்து வருகின்றனர். வாடிவாசலை மீட்டது போல இந்த நெடுவாசலை மீட்டெடுக்கும் விழிப்புணர்வுக்கு இளைஞர்கள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.