தமிழின் பெருமையை உலகுக்கு கொண்டு செல்ல ஜி.வி.பிரகாஷின் முதல் முயற்சி

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த ஏழில் ஒன்று தமிழ் மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்ற மற்ற 6 மொழிகளுக்கும் ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கை இல்லை
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலையில் தமிழுக்கான இருக்கை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் ரு.60 கோடி தேவைப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் இதுவரை ரூ.30 கோடி திரட்டப்பட்டுவிட்டது. மீதி ரூ.30 கோடியை திரட்ட உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசும் பகுதியில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நன்கொடை பெறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் இந்த முயற்சி நடந்தபோது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லாதது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம், தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்ய என்னால் முயன்ற ஒரு தொகையை அளித்துள்ளேன். இதை பார்த்து என்னுடைய ரசிகர்களும் பிற தமிழ் பற்றாளர்களும் நிதியுதவி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மொழியின் பண்பாடு, சிறப்புகளை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க என்னுடைய சிறு முயற்சி இது' என்று கூறியுள்ளார்