தனுஷின் 'அசுரன்' படத்தில் இணையும் பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் 'அசுரன்' என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் 'வெக்கை' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஒரு த்ரில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்' படங்களுக்கு பின் தனுஷ் நடிக்கும் படம் ஒன்றுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் 'ஜெயில்' படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.