ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் ஜிவி பிரகாஷின் 'ஜெயில்'!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் ஜிவி பிரகாஷின் ஜெயில் படம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வசந்தபாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த ’ஜெயில்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், ரவிமரியா, நந்தன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வசனம் எழுதியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பதாவது: அதிகாரத்தின் பெயரால் சக மனிதர்களுடைய பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக ஜெயில் உருவாகியிருக்கிறது. எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்களோ...! அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும் ஜெயில் என்ற தலைப்பு. இந்த படத்தில் ஒரு படிமமாக-ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. மானுட வளர்ச்சிக்கும், மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ... அவை அனைத்தும் ‘ஜெயில்’ தான்.
இந்தப்படத்தில் ‘இசை அசுரன்’ என ரசிகர்களால் போற்றப்படும் ஜீ. வி. பிரகாஷ் குமார், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன். நம்முடைய புராணங்களிலுள்ள கர்ணன், வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன் தான், அந்த பண்பு நலன் இந்தப்படத்தில் ஜீவிக்கும் பொருந்தும்.
சமகாலத்தின் வாழ்க்கை, நவீன சிந்தனை, நமது வரலாறு போன்ற விசயங்கள் என்னுடைய படைப்புகளில் இடம் பெறவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இதற்காகவே எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
‘ஜெயில்’ படத்தை முடித்துவிட்டு ‘அநீதி’ படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அப்போதுதான் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். திடீரென்று மூச்சுத் திணறல்.. செவிலியர்களிடமும் மருத்துவர்களிடம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்று சொன்னேன். எனக்கு ஆக்ஸிஜன் வைத்தார்கள். அந்த நேரத்தில் அந்த வார்டு முழுவதும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற வார்த்தைகள் கேட்டுக் கொண்டேயிருப்பது போல் உணர்ந்தேன். அதேசமயம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற குரல் ஜார்ஜ் பிளாய்ட்டின் குரலாகக் கேட்கத் தொடங்கியது. அவருடைய இந்த மூன்று வார்த்தைகள் விடுதலையின் குரல், அதற்காக ஏங்கி நிற்கும் வலியின் குரல். சர்வநிச்சயமாக ஒரு நோயாளியின் குரல் அல்ல. அப்போது போனில் கூகுளில் தூலாவிக்கொண்டிருந்தபோது ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற தனியிசைப் பாடல் 2020-க்கான கிராமி விருது பெற்றிருப்பது என் கண்களில் பட்டது. ஜெயில் படமும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்றுதானே குரல் எழுப்புகிறது என்கிற எண்ணம் வந்ததும் மருத்துவமனையிருந்தே பாடலுக்கான ‘டம்மி’ வரிகளை எழுதி ஜி.வி.பிரகாஷுக்கு வாட்ஸ் ஆப் வழியே அனுப்பினேன். அவரோ.. ‘இந்தச் சூழ்நிலையில் உங்கள் உடல்நிலையல்லாவா முக்கியம்’ என்றார். நோயை மறந்து வேலை செய்வது தான் உற்சாகம் என்றேன். உடனே பாடலுக்கான இசையைக் கம்போஸ் செய்து பல மெட்டுகளை அடுத்தடுத்து அனுப்பினார். அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். பாடலை யார் எழுதலாம் என்று யோசித்தபோது ‘தெருக்குரல்’ அறிவு சரியான தெரிவாக இருப்பார் என முடிவு செய்தோம். மெட்டைக் கேட்டு அறிவு எழுதி அனுப்பிய வரிகளைப் பார்த்ததும் அதில் அவர் பயன்படுத்தியிருந்த ‘நகரோடி’ என்கிற சொல் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. நாடோடி என்ற சொல் இருக்கிறது. ஆனால் ‘நகரோடி’ என்கிற சொல் முற்றிலும் புதியது. யார் இத்தனை அழகான நகரத்தை உருவாக்கினார்களோ.. அவர்களை இந்த நகரத்தின் புழக்கடைப் பகுதிக்கு அப்புறப்படுத்துவதை வலியுடன் உணர்த்தும் சொல்லாகவே அது இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் நிலை. அதைத்தான் ‘நகரோடி’ பாடல் சொல்கிறது. இது இந்த படத்துக்கான குரல் மட்டுமே அல்ல இந்த படத்திற்கான குரலாகவும், முகவரியாகவும் அமைந்திருக்கிறது.'' என்று கூறினார்.
'ஜெயில்’ படத்தில் நடிகர் தனுஷ், நடிகை அதிதி ராவ் ஹையாத்ரி குரலில் இடம்பெற்ற ‘காத்தோடு காத்தானேன்...’ எனத் தொடங்கும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி, 21 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் ‘நகரோடி...’ எனத் தொடங்கும் பாடலும் வெளியான இரண்டு தினங்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது என இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments