பூம்பூம் மாட்டுக்காரரை கண்டுபிடித்த ஜிவி பிரகாஷ்: விரைவில் நேரில் சந்திப்பு!

  • IndiaGlitz, [Friday,May 28 2021]

சில நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் இனிமையான இசை அனைவரையும் கவர்ந்தது என்பதும் இது குறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த வீடியோவை பார்த்த பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த நபரை கண்டுபிடிக்க யாராவது உதவினால் அவருக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன் என்றும் அவருடைய இசை மிகவும் உன்னதமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் அந்த பூம்பூம் மாட்டுக்காரரை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அவருடைய பெயர் நாராயணன் என்றும் அவர் பெங்களூரில் இருப்பதாகவும் கூறிய அவர்கள், அவருடைய தொலைபேசி எண்ணையும் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு பகிர்ந்தனர்.

இதனை அடுத்து பெங்களூரிலுள்ள நாராயணனை உடனே தொடர்பு கொண்டு பேசிய ஜீவி பிரகாஷ் தன்னுடைய படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு முடிந்தவுடன் சென்னைக்கு வந்து ஜிவி பிரகாஷை நேரில் சந்திப்பதாக நாராயணன் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கும் அடுத்த படத்தில் நாராயணனை தனது இசைக்குழுவில் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.